2009-11-13 16:46:06

சர்வதேச கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் 23வது பொது அவை


நவ.13,2009 நவம்பர் 16, வருகிற திங்களன்று உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் தொடங்கவிருக்கின்ற, FIUC என்ற சர்வதேச கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் 23வது பொது அவை குறித்து இவ்வெள்ளியன்று நிருபர் கூட்டத்தில் விளக்கப்பட்டது.

“அதிநவீன உலகில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்” என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இந்த ஐந்து நாள் மாநாட்டில் தமிழகம் உட்பட உலகின் பல நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இம்மாநாடு பற்றி நிருபர் கூட்டத்தில் பேசிய, திருப்பீட கத்தோலிக்கக் கல்வி பேராயத்தின் நேரடிச் செயலர் பேரருட்திரு ஆஞ்சலோ வின்சென்சோ சானி, இன்று உலகின் அனைத்துக் கண்டங்களிலும் ஏறத்தாழ 1210 கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன, இவற்றில் மிகவும் பெரியவையாக இருக்கும் 200 கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் இந்தச் சர்வதேச கூட்டமைப்பில் இருக்கின்றன என்று தெரிவித்தார்.

உலகில் எப்பொழுதும் எழுந்து வரும் புதிய புதிய சவால்களைத் திருச்சபை எதிர்கொள்வதற்கு இந்தக் கூட்டமைப்பு உதவி வருகின்றது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

“பிற மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுடனான உரையாடலில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம்”, “கத்தோலிக்கப் பல்கலைக்கழகமும் கிறிஸ்தவ அறிவாளர்களின் மரபும்”, “கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சமுதாயப் பொறுப்பு”, “கத்தோலிக்கப் பல்கலைக்கழகமும் அதன் எதிர்காலமும்” போன்ற தலைப்புகளில் இம்மாநாடு நடைபெறும் என்றும் நிருபர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 16ம் தேதி தொடங்கும் இந்த சர்வதேச மாநாடு நவம்பர் 20ம் தேதி நிறைவடையும்.








All the contents on this site are copyrighted ©.