2009-11-12 16:18:04

லும்சா பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை


நவ.12,2009 இன்றைய உலகை பரவலாகப் பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி, நல்லதோர் எதிர்காலத்தைச் சமைக்கத் தங்களையே தயாரிக்கும் இளையோரின் வாழ்வில் பல சவால்களை முன்வைத்துள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலியின் லும்சா எனப்படும் புனித விண்ணேற்பு மாதா பல்கலைகழகம் தொடங்கப்பட்டதன் 70ம் ஆண்டை முன்னிட்டு அதன் சுமார் ஏழாயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இன்றைய பொருளாதார நெருக்கடி, கல்விக்கு ஒரு தீர்மானமான மற்றும் அதிக முதலீடுகளை ஒதுக்க வேண்டிய தேவையை சுட்டிக் காட்டுகிறது என்று கூறினார்.
இளைய தலைமுறைகளுக்குப் பாரம்பரியச் சொத்துக்களாக, பல்கலைகழகங்களில் அடிப்படை மனித விழுமியங்கள் கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, மனித மதிப்பீடுகள், ஒழுக்கநெறிக்கூறுகள், அறிவியல் உண்மைகள் ஆகியவற்றை அறிந்த உண்மையான ஆசிரியர்கள் இக்காலத்தில் மிகவும் தேவைப்படுகிறார்கள் என்றும் கூறினார்.வணக்கத்துக்குரிய அன்னை லூயிசா தின்கனி மற்றும் அப்போதைய கத்தோலிக்கக் கல்வி பேராயத் தலைவர் கர்தினால் ஜோசப் பத்ஸ்ஸார்டாவின் கூட்டு முயற்சியினால் 1939ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த லும்சா தேசிய பல்கலைகழகத்திழன் பல கிளைகளில் தற்சமயம் சுமார் ஒன்பதாயிரம் மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.