2009-11-11 13:32:03

திருத்தந்தையின் புதன் மறைபோதகம்.


11.11.09. மத்திய காலத்தின் கிறிஸ்தவ நாகரீகம் குறித்த நம் மறைபோதனையில் இன்று, குளுனியின் உன்னத துறவுமட வாழ்வோடு தொடர்புடைய துறவுமட சீர்திருத்தங்கள் குறித்து நோக்குவோம் என தன் புதன் பொது மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

1100 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு, புனித பெனடிக்டின் சட்டங்களை மிகத்தீவிரமாக கடைபிடிக்கும் முறையை மீண்டும் கொணர்ந்த குளுனி துறவுசபை, திருச்சபை வழ்வின் மையமாக திருவழிபாட்டை ஆக்கியது. இது, திருப்புகழ்மாலை, திருப்பலி ஆகியவைகள் கொண்டாடப்படுவதை வலியுறுத்தியதுடன், நேர்த்தியான நுண்கலை, கட்டிடக்கலை மற்றும் இசையுடன் இறைவழிபாட்டை மேலும் வளப்படுத்தியது. வானுலக திருவழிபாட்டின் முன்சுவையாய் நோக்கப்பட்ட துறவுமட திருவழிபாடானது, தினசரி நடைமுறை வாழ்க்கையின் அங்கங்களான இறைவேண்டுதல் செபம் மற்றும் மௌனத்தை உள்ளடக்கியதானது. குளுனி துறவு இல்லத்தின் புனிதத்துவம் மற்றும் அறிவுத்தாகம் குறித்த புகழின் தாக்கமானது ஐரோப்பாவின் துறவு இல்லங்கள் முழுமைக்கும் பரவியது. இவ்வுலகத் தலைவர்களின் தலையீடுகளிலிருந்து சுதந்திரம் பெற்றதாய்ச் செயல்பட்ட குளுனி துறவுமடம், தன் துறவுமட அதிபர்களை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்க உரிமை கொண்டது. புனிதர்கள் ஒடோ மற்றும் ஹூக் போன்ற புகழ்வாய்ந்த ஆன்மீகத் தலைவர்களால் அது வளர்ந்து முன்னேறியது. புனிதத்துவம், குருக்களின் கன்னிமை வாழ்வை வலியுறுத்தல், கோவில் மானியப் பேரத்தை ஒழித்தல் போன்றவைகளின் மீதான அக்கறை மூலம் அகில உலகத்திருச்சபையின் சீர்திருத்தங்களுக்குப் பெரிதும் பங்காற்றியது குளுனி துறவு இல்லம். ஐரோப்பாவின் வரலாறு நல் உருவாக்கம் பெற்று வந்த காலத்தில் மெய்ப்பொருளின் முதன்மை நிலை, மனித மாண்பிற்கான மதிப்பு, அமைதிக்கான அர்ப்பணம், உண்மையான ஒன்றிணைந்த மனித நிலை கோட்பாடு போன்றவைகளை வலியுறுத்தியதன் வழி, குளுனி துறவுசபையானது ஐரோப்பியக்கண்டத்தின் கிறித்தவத் தனித்தன்மையை உருவாக்க உதவியுள்ளது.

இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய பாப்பிறை, அதன் இறுதியில், இலங்கையின் அமைதி வாழ்வுக்கு உழைப்பதற்கான அழைப்பொன்றையும் விடுத்தார்.

இலங்கையில் இரத்தம் சிந்த வைத்த மோதல் முடிவுக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்துள்ளன. போரால் குடிபெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு பாதுகாப்பாய் செல்வதற்கு உதவும் வகையிலான அரசு அதிகாரிகளின் அண்மை வாரங்களிலான பணிகள் திருப்தியுடன் நோக்கப்படுகின்றன. அர்ப்பணத்துடன் கூடிய இப்பணிகள் மேலும் தீவிரமாக இடம்பெற வேண்டும் என நான் உறுதியாக ஊக்கமளிக்கிறேன். அதே வேளை, இந்நாடு இன்றும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு, நீதியான அரசியல் தீர்வு காணவும், மனித உரிமைகளுக்கான முழுமதிப்புடன் கூடிய அமைதியை விரைவாகப் பெற உழைக்கவும் அனைத்து குடிமக்களையும் வலியுறுத்துகிறேன். இறுதியாக, இலங்கையின் மனிதாபிமான, பொருளாதார தேவைகளை நிறைவுச் செய்ய சர்வதேச சமுதாயம் உழைக்கும் என்ற நம்பிக்கையுடன், இவ்வன்பு நிறை நாடான இலங்கையை கண்ணோக்கும்படி மடுமாதாவை நோக்கி என் செபங்களை எழுப்புகிறேன் என உரையாற்றினார் பாப்பிறை. பின்னர் அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.