2009-11-10 15:26:56

நவீன உலகம் தொடர்ந்து வாழ வேண்டுமெனில் சுற்றுச்சூழலுக்கு அது செய்து வரும் தீமைகளைக் கைவிட வேண்டும், இந்திய ஆயர்


நவ.10,2009 விவிலிய நகரமான நினிவேயின் இரண்டக நிலையை எதிர்கொள்ளும் இப்போதைய நவீன உலகம் தொடர்ந்து வாழ வேண்டுமெனில் சுற்றுச்சூழலுக்கு அது செய்து வரும் தீமைகளைக் கைவிட வேண்டுமென்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.

உலகம் தற்போது செய்து கொண்டிருக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்தால் மனிதர்கள் நீண்ட காலத்துக்கு உயிர் வாழ முடியாது, எனவே இப்பூமியைப் பாதுகாப்பதற்கு ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டுமென்று மேற்கு வங்காளத்தின் அசன்சோல் ஆயர் சிப்பிரியான் மோனிஸ் கூறினார்.

உலக அமைதிக்கும் மனித விடுதலைக்குமான சுற்றுச்சூழல் ஆன்மீகம் என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சிப் பாசறையில் உரையாற்றிய ஆயர் மோனிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

அசீரிய நகரமான நினிவேயை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு இறைவன் யோனா இறைவாக்கினரை அங்கு அனுப்பினார், அம்மக்களும் தங்களது தீய செயல்களைக் கைவிட்டடனர், கடவுளும் அந்நகரை அழிக்காமல் விட்டுவிட்டார் என்றும் அவர் கூறினார்.

இப்பூமி பற்றிய தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொள்வதோடு இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்ய முன்வருமாறும் ஆயர் விண்ணப்பித்தார்.

வங்காளப் பகுதி ஆயர்கள் அவையும், சிக்கிம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் இருபால் துறவிகளின் அவையும் நடத்திய இக்கூட்டத்தில் 7 ஆயர்களும் 51 துறவற சபை அதிபர்களும் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.