2009-11-10 15:19:26

திருத்தந்தை-ஒற்றுமை இல்லையெனில் இத்தாலியில் வளர்ச்சி இடம்பெறுவது கடினம்


நவ.10,2009 திருச்சபையின் தொடர்ச்சியான வாழ்வுக்கும் அது தொடர்ந்து பரவுவதற்கும் கல்வி இன்றியமையாதது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இத்தாலிய ஆயர்களிடம் கூறினார்.

இத்திங்களன்று இத்தாலியின் அசிசி நகரில் அறுபதாவது பொது அவையைத் தொடங்கியுள்ள இத்தாலிய ஆயர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, மக்கள் அனைவரும், ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுவதற்கும் அவரைச் சந்திப்பதற்கும் உதவும் நோக்கத்துடன் இயங்கும் திருச்சபையின் மறைப்பணிக்கு மையமாகவும் கல்வி அமைகின்றது என்றும் குறிப்பிட்டார்.

இன்றைய நவீன கல்வி, திருச்சபையின் அனைத்துத் துறைகளிலும் முன்வைக்கும் சவால்கள் பற்றியும் குறிப்பிட்ட அவர், மனிதனின் ஒருங்கிணைந்த ஆளுமையை உருவாக்குவதற்கு கவனம் செலுத்தப்படுமாறு கேட்டுக் கொண்டார்.

கடவுளை ஒதுக்கி அல்லது அவர் இல்லாத மனிதனின் வாழ்வில் அவன் செல்ல வேண்டிய சரியான திசைக்குச் செல்வதில் பிரச்சனை உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார்.

இத்தாலியின் தென்பகுதி குறித்த, தோழமையில் வளர்ச்சி என்ற ஏடு வெளியிடப்பட்டு இருபது ஆண்டு ஆகியிருப்பதையும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஒற்றுமை இல்லையெனில் இத்தாலியில் வளர்ச்சி இடம்பெறுவது கடினம் என்றும் கூறினார்.

புதிய அடக்கச்சடங்கு வழிபாட்டு முறைகள் குறித்து ஆயர்கள் பரிசீலனை செய்து வருவது பற்றியும் கூறியுள்ள திருத்தந்தை, மரணம் பற்றிய எண்ணத்தை அகற்றிவிட நினைக்கும் ஒரு சமுதாயத்தில், மரணம் பற்றிய கிறிஸ்தவப் பேருண்மையை எடுத்துச் சொல்ல வேண்டியது விசுவாசிகளின் கடமை என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.