2009-11-10 15:27:09

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பிரான்ஸ் நாடெங்கும் மக்கள் எதிர்நோக்கும் புதுவிதமான வறுமையை அகற்றுவதற்கு கிறிஸ்தவர்கள் உதவ ஆயர்கள் வேண்டுகோள்


நவ.10,2009 தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பிரான்ஸ் நாடெங்கும் மக்கள் எதிர்நோக்கும் புதுவிதமான வறுமையை அகற்றுவதற்கு கிறிஸ்தவர்கள் உதவுமாறு அந்நாட்டு ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இக்காலத்திய புதுவிதமான ஏழ்மைகள், உறுதியான குடும்பங்களைச் சீர்குலைக்கின்றன, வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கின்றன, விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையைக் குறைக்கின்றன, வீடுகள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளன என்று இவ்வாரத்தில் ப்ரெஞ்ச் ஆயர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

பொதுமக்களின் உதவிகள் குறையும் போது, கிறிஸ்தவ சமூகங்களின் ஆதரவுடன் செயல்படும் பிறரன்பு கழகங்கள் செய்யும் உதவிகளை அறிந்தே இருக்கிறோம் என்றுரைக்கும் ஆயர்கள், கிறிஸ்துமஸ் அண்மித்து வரும் இக்காலத்தில் அவ்விழாவை அர்த்தமுள்ளதாக்க கிறிஸ்தவர்கள் தங்களது தோழமையைக் காட்டுமாறு கேட்டுள்ளனர்.

பிரான்சின் மொத்த மக்கட்தொகையில் ஏழு விழுக்காட்டுக்கு அதிகமாக இருக்கின்ற அதாவது அந்நாட்டில் வாழும் 43 இலட்சம் குடியேற்றதாரருக்காகவும் ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பிரான்சில் குருக்கள் பற்றாக்குறையால் அங்குள்ள 36 ஆயிரம் கத்தோலிக்கப் பங்குகளில் 15 ஆயிரம் பங்குகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதையும் ஆயர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்







All the contents on this site are copyrighted ©.