2009-11-07 14:50:35

பாப்பிறை ஆறாம் பவுல் இறந்ததன் முப்பதாம் ஆண்டை முன்னிட்டு பிரேஷாவுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருப்பயணம்


நவ.07,2009 பாப்பிறை ஆறாம் பவுல் இறந்ததன் முப்பதாம் ஆண்டை முன்னிட்டு வட இத்தாலியிலுள்ள அவரின் தாயகப் பகுதியான பிரேஷ (Brescia) வுக்கு இஞ்ஞாயிறன்று ஒருநாள் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

இத்திருப்பயணத்தில், பாப்பிறை ஆறாம் பவுல் பிறந்த ஊரான Concesio வில் பாப்பிறை ஆறாம் பவுல் மையத்தைத் தொடங்கி வைப்பார். அத்திருத்தந்தையின் இரண்டு கையெழுத்துப் பிரதிகளையும் அம்மையத்திற்கென வழங்குவார். மேலும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கக் கோட்பாடுகளுக்கு அதிகாரப் பூர்வமாக விளக்கம் அளிப்பதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் இங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் “சர்வதேச ஆறாம் பவுல்” விருதையும் வழங்குவார் திருத்தந்தை. இவ்விருது, பாப்பிறை 2ம் ஜான் பவுலால் “கத்தோலிக்க நொபெல் விருது” என அழைக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

ஜோவான்னி மொந்தினி Giovanni Montini என்ற இயற்பெயரைக் கொண்ட பாப்பிறை ஆறாம் பவுல், பிரேஷா மாகாணத்தின் Concesio என்ற ஊரில் 1897ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி பிறந்தார். 1963ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி தமது பாப்பிறைப் பணியைத் தொடங்கிய இவர், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி தமது 80ம் வயதில் இறந்தார்.

1977ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி ஜெர்மனியின் மியூனிக் பேராயராக தற்போதைய திருத்தந்தையாகிய ஜோசப் ராட்சிங்கரை நியமித்து அதே ஆண்டு மே 28ம் தேதி அவரைக் கர்தினாலாகவும் உயர்த்தினார் பாப்பிறை ஆறாம் பவுல்.








All the contents on this site are copyrighted ©.