2009-11-07 13:37:55

ஞாயிறு சிந்தனை


சென்ற செவ்வாயன்று விவிலியத் தேடலில் இரு பெண்களுக்கு இயேசு ஆற்றிய புதுமைகளைச் சிந்தித்த பொது, அப்பெண்கள் வழியே ஒரு சில பாடங்களைக் கற்றுக்கொள்ள முயன்றோம். இந்த ஞாயிறு சிந்தனையின் போது இன்னும் இரு பெண்களைப் பற்றி சிந்திக்க, அவர்கள் வழியே இன்னும் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள நமக்கு மேலும் ஒரு வாய்ப்பு. வழக்கமாக, ஞாயிறு சிந்தனைக்கு நற்செய்தியை மட்டும் மையப்படுத்துவோம். இன்று, அரசர் நூலிலிருந்து ஒரு பகுதியையும், மாற்கு நற்செய்தியிலிருந்து ஒரு பகுதியையும் நமது சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
அரசர்கள் நூலில் எலியா என்ற இறைவாக்கினர் சந்திக்கும் கைம்பெண்ணை நாமும் சந்திப்போம். அவரைப் பற்றி சிந்திப்போம். அந்த கைம்பெண்ணும், அவரது மகனும் வாழ்ந்தது ஒரு அவலமான வாழ்க்கை. இன்றைய நமது உலகில், இந்தியாவில் வாழும்… (வாழும் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு ரொம்பத் தயக்கமாக உள்ளது.) வாழ்வும் முடியாமல், சாகவும் முடியாமல், தினமும் போராடும் பலகோடி ஏழைகளின் பிரதிநிதிகள் இவர்கள். அடுத்தநாள் ஏன் விடிகிறது என்ற கேள்வியோடு, அல்லது அடுத்தநாள் விடியாமலே இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்தோடு படுக்கச் செல்லும் கோடிக்கணக்கான ஏழைகளில் இவர்களும் அடங்குவர். விடிந்தால் தானே, தூக்கம் கலைந்து எழ வேண்டும்? விடிந்தால் தானே, அடுத்த நாள், அடுத்த வேளை உணவு தேவைப் படும்? விடியவில்லை என்றால், தூங்கிக்கொண்டே இருக்கலாம், ஒரு வேளை நல்ல வாழ்வு வரும் என்ற கனவாவது தூக்கத்தில் வரலாமே, வயிற்று பசியை மறக்க இந்தக் கனவுகள் உதவலாமே... இப்படி வாழும் கோடிக்கணக்கானோரை எண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பை நமக்குத் தருகிறது இன்றைய அருள்வாக்கு.
அரசர்கள் நூலின் ஒரு பகுதி இந்தக் கைம்பெண் வைத்திருந்த சொத்து விவரங்களைக் கொடுத்துள்ளது. “என்னிடம் அப்பம் ஏதும் இல்லை: பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன.” ஒரு பானை, அதில் கையளவு மாவு, மற்றொரு கலயம் அதில் சிறிது எண்ணெய்... இவ்வளவு தான் இவரது சொத்து. இவற்றை வைத்து அன்றையப் பொழுதை முடிக்கலாம். அடுத்த நாள்? சாகத்தான் வேண்டும் என்று அவரே தீர்ப்பு எழுதிவிட்டார். சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மனதில் ஓடிய எண்ணங்கள் இப்படி இருந்திருக்குமோ என்று நினைத்துப் பார்க்கிறேன். "கடவுளே, இன்னைக்கி செய்ற அப்பங்கள் ரெண்டு பேருக்கும் போதாதுன்னு நினைக்கிறேன். பாவம் என் பையன். அவன் வயிறாரச் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு? எனக்கு ஒன்னும் கிடைக்கதேன்னு நினச்சு அவன் பட்டினி கிடக்கிறான். இன்னக்கி ஏதாவது பொய்யைச் சொல்லி அவனைச் சாப்பிட வெச்சிட்டு அப்புறம் ஏதாவது மிச்சம் இருந்தா, நான் சாப்பிட்டுகிறேன். என்பையனை இன்னக்கி நல்லா சாப்பிட வைக்க ஏதாவது வழியக் காட்டு ஆண்டவனே..." இப்படிக் கடவுளோடு பேசிக்கொண்டே சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த அந்த கைம்பெண்ணின் வாழ்க்கையில் கடவுள் குறுக்கிடுகிறார்.
எலியா என்ற இறை வாக்கினர் வழியாகக் கடவுள் வருகிறார். சும்மா வரவில்லை. ஒரு பிரச்சனையைக் கொண்டு வருகிறார். அந்த பெண்ணின் உணவில் பங்கு கேட்டு வருகிறார். கொடூரமான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அவரது வயிற்றில் அடிக்க வருகிறார். முதலில் எதேச்சையாகத் தண்ணீர் மட்டும் கேட்கும் எலியா, அந்தப் பெண் போகும் போது, 'கொஞ்சம் அப்பமும் கொண்டு வா' என்கிறார். ஏதோ அந்தப் பெண் வீட்டில் அப்பங்களைச் சுட்டு அடுக்கி வைத்திருப்பது போலவும், அவைகளில் ஒன்றிரண்டைக் கொண்டு வா என்பது போலவும் உள்ளது எலியாவின் கூற்று. மேலோட்டமாகப் பார்த்தால், எலியா அவரைக் கேலி செய்வது போலவும் தோன்றுகிறது.
ஆனால் அது கேலி அல்ல, ஒரு மறைமுக அழைப்பு. கடவுள் புதுமைகள் செய்வதைக் காண்பதற்கு ஒரு அழைப்பு. “எனக்குக் கொஞ்சம் அபப்மும் கையோடு கொண்டு வருவாயா?” என்று அந்தக் கைம்பெண்ணுக்கு இப்படி ஒரு அழைப்பை மறைமுகமாகத் தருகிறார்.  அந்த அழைப்பைப் புரிந்து கொள்ள முடியவில்லை அந்தப் பெண்ணுக்கு. தன் பசி, அதைவிட தன் மகனின் பசி இவையே அவரது மனதை ஆக்ரமித்ததால், தன் இயலாமையை, விரக்தியை இவ்வார்த்தைகளில் கூறுகிறார். “வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை: பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்.” மனதை உலுக்கும் வகையில் அந்தப் பெண் சொன்ன மரண அறிக்கையைக் கேட்ட பின்னர் எலியா அவரிடம் இறைவன் செய்யக்கூடிய அற்புதங்களைச் சொல்கிறார். அந்தப் பெண்ணுக்கு அவர் சொன்னதெல்லாம் விளங்கியதோ இல்லையோ, "அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார்" என்று இறைவாக்கு கூறுகிறது.
அன்பர்களே, அந்தப் பெண் எலியாவை முன்பின் பார்த்தது கிடையாது... இந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் மனதில் ஓடிய எண்ணங்களை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன். "இன்னைக்கி என் மகனும், நானும் சாப்பிட்டா, இன்னும் ரெண்டு நாள் உயிரோட இருப்போம். அதுக்கப்புறம் சாகத்தான் வேண்டும். சாகுறதுக்கு முன்னால இன்னொரு மனுஷனுடைய பசியை தீர்த்துட்டு சாகலாமே... பாவம், அந்த மனுஷன்."
புதுமை நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு அந்த ஏழை கைம்பெண் எலியாவுக்கு அப்பம் சுட்டு தந்திருக்கலாம். ஆனால், அதைவிட, மேலாக தனது இயலாமையிலும், வறுமையிலும் பசியிலும் இன்னொரு மனிதரின் பசியைப் போக்க வேண்டும் என்ற ஆவல் அவரிடம் இருந்திருக்க வேண்டும். ஏழைகளின் மனம் அப்படிப்பட்டது. அவர்களுக்குத்தான் தாழ்வதென்றால், தவிப்பதென்றால், பசிப்பதேன்றால் என்னவென்று அனுபவப்பூர்வமாகத் தெரியும். அவர்களுக்குத் தான் தங்களிடம் உள்ளத்தைப் பகிர்ந்து பசியைப் போக்கும் புதுமை செய்யத் தெரியும். மற்றவர்களின் தேவைகள், துன்பங்கள் இவற்றைத் துடைப்பதையே பெரிதாக எண்ணும் மனம் அவர்களது...
அந்தக் கைம்பெண் அந்த இரண்டு மூன்று அப்பங்களைச் சுடும் போது, அடுத்த நாள் பற்றி கூட நினைக்காமல் தன்னிடம் இருந்த மாவனைத்தும் சுத்தமாய் துடைத்து எடுத்து நல்ல காரியம் செய்கிறார். நற்செய்தியில் கூறப்படும் கைம்பெண்ணும் இதையே செய்கிறார். இயேசு அந்தப் பெண்ணைப்பற்றி கூறும் வார்த்தைகள் ஆழமானவை: “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்”
இருந்ததைப் போட்டார், பிழைப்புக்காக வைத்திருந்ததைப் போட்டார். நிகழ் காலம், எதிர் காலம் இரண்டையும் காணிக்கை பெட்டியில் போடுகிறார். அப்படி ஓர் ஆழ்ந்த நம்பிக்கை கடவுள் மேல். கடவுள் தன் தியாகத்தைப் பார்த்து ஏதாவது செய்வார் என்று இப்படி செய்தாரா? அந்தக் கண்ணோட்டம் வியாபாரம். கடவுளே நான் இவ்வளவு தருகிறேன் நீ இவ்வளவு தா என்ற பேரம்... இயேசு புகழ்ந்த கைம்பெண் வியாபார பேரங்களைக் கடந்தவர். கடவுளுக்குத் தன்னிடம் இருந்தவை எல்லாவற்றையும் மகிழ்வாகத் தந்தவர். எனவே தான் இயேசுவின் இந்த மனமார்ந்த பாராட்டுகளைப் பெறுகிறார். அந்தப் பெண் இந்தப் புகழுரையைக் கேட்டாரா? காணிக்கை செலுத்திய திருப்தியுடன் காணாமல் போய்விட்டார். அந்தப் பெண்ணுக்கு பெயர் கூட இல்லை. கட்டடங்களிலும், கற்களிலும், போஸ்டர்களிலும் பெயர்களைப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக நல்லது செய்வது ஏழைகளின் அழகு. இதற்கு நேர் மாறாக, அங்கு காணிக்கை செலுத்த வந்த மற்ற செல்வந்தர்கள். அவர்கள் செலுத்திய காணிக்கைகளோடு இந்தக் கைம்பெண்ணின் காணிக்கையை ஒப்பிட்டு பார்த்தால்?.... கொஞ்சம் பொறுங்கள்… எந்த வகையில் ஒப்பிடப் போகிறோம்? எவ்வளவு போட்டார்கள் என்று அளந்தால், செல்வந்தர்கள் போட்டது ஒருவேளை 1000 ரூபாய் என்றால், இந்த ஏழை போட்டது... 50 காசுகள். ஆனால், அது கணக்கல்ல. எவ்வளவு போட்டார்கள் என்பதை விட, காணிக்கை செலுத்திய பின் அவர்களிடம் என்ன மீதி இருந்தது என்பது தான் காணிக்கையின் மதிப்பைக் காட்டும். காணிக்கையின் மதிப்பைக் கூட்டும். இதைதான் ஏசுவும் கூறுகிறார். “இந்த ஏழைக் கைம்பெண்... தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்”
இதைத் தான், அன்னை தெரசா இன்னொரு வகையில் சொல்வார்: "Give till it hurts " "கொடுங்கள், உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் கொடுங்கள்." அல்லது, "கொடுங்கள், உங்கள் உடலை வருத்திக் கொடுங்கள்." என்று. நம் தமிழ் பாரம்பரியத்தில் பேசப்படும் சிபி சக்ரவர்த்தி நினைவுக்கு வருகிறார். தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்ற, தன் உடலின் சதையை அறுத்துத் தந்த அந்த மன்னர் அன்னை தெரசா சொன்னது போல் உடலை வருத்தித் தந்தவர். கர்ணனும் இப்படி கொடுத்ததாக நமது மகாபாரதம் சொல்கிறது.
 கடவுளுக்கும், பிறருக்கும் தரும்போது எதையும் எதிபார்க்காமல், நம் உடலை, வாழ்வை வருத்தி தர வேண்டும். அதுவே மேலான காணிக்கை. இதைச் இன்றைய இறைவாக்கு வழியேச் சொல்லித்தந்த இரு கைம்பெண்களுக்காக  இறைவனுக்கு நன்றி சொல்வோம்.







All the contents on this site are copyrighted ©.