2009-11-07 14:56:20

இலங்கையில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளில் பலரின் வீடுகள் அழிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் சேதமடைந்த ஆலயங்களில் அடைக்கலம் தேடுகின்றனர்


நவ.07,2009 இலங்கையில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளில் பலரின் வீடுகள் அழிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் சேதமடைந்த ஆலயங்களில் அடைக்கலம் தேடுகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இலங்கையின் 26 வருட உள்நாட்டுப் போர் முடிந்து ஆறு மாதங்கள் ஆகிய பின்னர் மெனிக் பார்ம் தடுப்பு முகாமிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலையடைந்து செல்லும் தமிழ் அகதிகளில் பலர் ஆலயங்களில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கிராமங்களைப் பார்வையிட்டுள்ள மன்னார் மறைமாவட்ட காரித்தாஸ் இயக்குனர் அருள்திரு பெப்பி சூசை உரைக்கையில், 99 விழுக்காட்டு வீடுகள் அழிக்கப்பட்டும் சேதமடைந்தும் உள்ளன, அவற்றில் புட்கள் முளைத்துள்ளன என்று தெரிவித்தார்.

இந்த அகதிகள், சேதமடைந்துள்ள ஆறு ஆலயங்களிலும் ஆலய வளாகங்களிலுள்ள தற்காலிக கொட்டகைகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும், இவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் திருச்சபை செய்வதற்கு அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்றும் குரு பெப்பி சூசை கூறினார்.

ஐ.நா.நிறுவனங்கள் மட்டுமே இந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, வரும் வாரங்களில் ஏறத்தாழ 158,990 அகதிகள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித்தா போகோலகாமா (Rohitha Bogollagama) கொழும்புவில் அரசியல் தூதர்களிடம் தெரிவித்துள்ளார்.

 








All the contents on this site are copyrighted ©.