2009-11-06 14:51:30

இலங்கையில் காவல்துறையினரின் வன்முறைகளைக் கண்டித்து பேரணி


நவ.06,2009 இலங்கையில் காவல்துறையினரின் வன்முறைகளைக் கண்டித்து குருக்கள், கன்னியர் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கொழும்புவில் எதிர்ப்புப் பேரணி ஒன்றை இவ்வாரத்தில் நடத்தியுள்ளனர்.

கடந்த மாதம் 29ம் தேதி, பாம்பலபிட்டியா என்ற ஊரில் மனநலம் பாதிக்கப்பட்ட பாலவர்னன் சிவக்குமார் என்ற தமிழ் இளைஞனை காவல்துறை அடித்தே கொலை செய்ததைக் கண்டித்து, கத்தோலிக்கர், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள், மனித உரிமை நடவடிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கான பேர் இதில் கலந்து கொண்டனர்.

“காக்கி யூனிபார்மில் கொலைகளுக்கு எதிர்ப்பு” என்று ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அட்டைகளுடன் இந்தப் பேரணியை நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட கொழும்பு ஆங்கிலிக்கன் ஆயர் துலீப் தெ சிக்கேரா, இந்த இளைஞன் கொல்லப்பட்டது குறித்து உடனடி விசாரணைகள் நடத்தப்படுமாறு அரசு அதிகாரிகளுக்கு வேண்டு கோள்விடுத்தார்.

அருட்திரு இட்டாமல்கோடா பேசுகையில், காவல்துறையின் கட்டளைகளுக்கு உடனே கீழ்ப்படியாத எவரும் சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டு கடும் எதிரியாக நோக்கப்படுகின்றார் என்றும் இத்தகைய மக்களைக் கொலை செய்வதற்கு காவல்துறையினர் இயற்கையான தூண்டுதலைக் கொண்டிருப்பது போல் தெரிகின்றது என்றும் கூறினார்.

2009ம் ஆண்டில் மட்டும் காவல்துறையின் காவலின் போது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அக்குரு தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.