2009-11-06 14:50:27

இப்பூமி வெப்பமடைந்து வருவதைக் குறைப்பதற்கு உலகத் தலைவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இது ஏழைகள் மற்றும் பசியாய் இருப்போர் மீது கடும் விளைவை ஏற்படுத்தும், சர்வதேச காரித்தாஸ்


நவ.06,2009 இப்பூமி வெப்பமடைந்து வருவதைக் குறைப்பதற்கு உலகத் தலைவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்நிலை ஏழைகள் மற்றும் பசியாய் இருப்போர் மீது கடும் விளைவை ஏற்படுத்தும் என்று சர்வதேச காரித்தாஸ் மற்றும் பிற மனிதாபிமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

உலக வெப்பநிலை மாற்றம், தற்போது போதிய உணவின்றி வாடும் 100 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்கு தடங்கலாய் இருக்கினறது என்றுரைக்கும் சர்வதேச காரித்தாஸின் அண்மை அறிக்கை, இதனைத் தடுப்பதற்குத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், அடுத்த பத்தாண்டுகளில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பசிக் கொடுமையை அதிகரிக்கும் என்று கூறுகிறது.

வெப்பமண்டல மற்றும் அதற்கருகிலுள்ள நாடுகளில் 2020ம் ஆண்டு வாக்கில் வெப்பநிலை 2 முதல் 3 செல்சியுஸ் டிகிரிகள் அதிகரிக்கும் என்றும், இது, சாகுபடி நிலங்களை 40 முதல் 90 விழுக்காடு வரை தரிசு நிலங்களாக மாற்றும் என்றும் ஆப்ரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் சில பகுதிகள் பாலை நிலங்களாக மாறும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

2007ம் ஆண்டில் மட்டும் 7 கோடியே 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இயற்கைப் பேரிழிவுகளால் பாதிக்கப்பட்டனர்.

164 கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்புகளின் கூட்டமைப்பாகிய சர்வதேச காரித்தாஸ் அலுவலகத்தில் இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

வருகிற டிசம்பர் 7 முதல் 18 வரை, டென்மார்க்கின் கோப்பன்ஹாகனில் நடைபெறவிருக்கும் வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா.உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் சுற்றுச் சூழல் அமைச்சர்கள் மற்றும்பிற அதிகாரிகளுக்கென இவ்வறிக்கை வெளியிடப்பட்டது. இம்மாநாட்டில் காரித்தாஸிலிருந்து ஏறத்தாழ 40 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.