2009-11-05 16:01:11

துன்ப துயரங்களையும் சோதனைகளையும் நித்திய வாழ்க்கையின் கண்ணோட்டத்தில் தாங்கிக் கொள்ளும் போது அவை உண்மையிலேயே மிகுந்த மதிப்பு மிக்கதாக இருக்கும், திருத்தந்தை


நவ.05,2009 இவ்வுலகில் நாம் எதிர்கொள்ளும் துன்ப துயரங்களையும் சோதனைகளையும் நித்திய வாழ்க்கையின் கண்ணோட்டத்தில் தாங்கிக் கொள்ளும் போது அவை உண்மையிலேயே மிகுந்த மதிப்பு மிக்கதாக இருக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருச்சபையில் இறந்த கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களின் ஆன்மாக்களுக்காக இவ்வியாழனன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை, நமது ஒவ்வொரு சோதனையயும் உறுதியான பொறுமையுடனும் இறையரசுக்காகவும் தாங்கிக் கொள்ளும் போது உண்மையிலேயே இவ்வுலகிலே நாம் பேரின்ப பெருவாழ்வை அனுபவிப்போம் என்று உரைத்தார்.

நாம் இவ்வுலகில் பயணிகளே என்றும் குறிப்பிட்ட அவர், கிறிஸ்துவின் பாடுகளோடு நாம் ஒன்றித்து வாழும் போது நமது வாழ்வை நம் ஆண்டவருக்கு உகந்த அன்பின் பலிப்பொருளாகக் கொடுக்க முடியும் என்றும் கூறினார்.

திருச்சபையில் இறந்த கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்கள் கடவுளரசுக்காகச் செய்த நற்பணிகளையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, அவர்களின் ஆன்மாக்கள் நிறைசாந்தியடைய செபிப்போம் எனவும் விசுவாசிகளைக் கேட்டுக் கொண்டார்.

2008, டிசம்பரிலிருந்து 2009ம் ஆண்டு இந்நாள் வரை 7 கர்தினால்கள், 100 பேராயர்கள் மற்றும் ஆயர்கள் இறந்துள்ளனர். தற்சமயம் திருச்சபையில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்குட்பட்டவர்கள் கர்தினால்களின் எண்ணிக்கை 114 ஆக உள்ளது.








All the contents on this site are copyrighted ©.