2009-11-04 14:54:46

புனித பூமியில் அமைதியைக் கொணருவதற்கு திருப்பீடம் விரும்புகின்றது, பேராயர் மிலியோரே


நவ.04,2009 புனித பூமியில் அமைதியைக் கொணருவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நிலையான தீர்வும், எருசலேம் புனித நகரத்தின் சர்வதேச நிலையை கருத்தில் கொண்டதாய் இருக்க வேண்டுமென திருப்பீடம் விரும்புகின்றது என்று பேராயர் செலஸ்தீனோ மிலியோரே ஐ.நா.கூட்டத்தில் வலியுறுத்தினார்.
அண்மை கிழக்கு நாடுகளில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் பணிகள் குறித்த 64வது ஐ.நா.பொது அவையில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் மிலியோரே, மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள குழப்பமான பல சூழல்களுக்குத் தீர்வு காண்பதில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களுக்கான தீர்வு முக்கியம் என்று கூறினார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியையே தழுவி வருகின்றன என்றும், இப்பேச்சுவார்த்தைகளில் இவ்விரு தரப்பும் எவ்வித வரையறைகளையும் முன்வைப்பதை தவிர்த்து, ஒரு சமச்சீரான அணுகுமுறையை கையாள்வதற்குச் சர்வசேத சமுதாயம் ஆவன செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புனிதத் தலங்களுக்கு எல்லா நாட்டினரும் அனைத்து மதத்தினரும் சுதந்திரமாகவும் தடையின்றியும் செல்வதற்கும், சமய மற்றும் மனச்சான்றின் சுதந்திரத்திற்கும் சர்வதேச அளவில் வழங்கப்பட்ட உறுதிப்பாட்டிற்கு திருப்பீடம் ஆதரவளிக்கின்றது என்றும் பேராயர் மிலியோரே ஐ.நா. கூட்டத்தில் தெரிவித்தார்.பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் பணிகள் தொடங்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு, தற்சமயம் நினைவுகூரப்படுவது பற்றியும் குறிப்பிட்டுப் பேசிய அவர், பாலஸ்தீன அகதிகளின் இப்போதைய துன்ப நிலை, கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.