2009-11-04 14:55:07

சிலுவை குறித்த மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வேதனை தருகிறது - வத்திக்கான்


நவ. 04, 2009. மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அரசு பள்ளிகளில்   வைக்கப்பட்டுள்ள சிலுவைகள் தனிமனித சுதந்திரத்திற்கு தடையாக உள்ளதென இச்செவ்வாயன்று தீர்ப்பு வழங்கியது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருவதாக திருப்பீட செய்தித்துறை இயக்குனர் இயேசு சபை குரு Federico Lombardi செய்தியாளர்களிடம் தெரிவித்தார். Finnish நாட்டிலிருந்து இத்தாலியில் குடிபெயர்ந்துள்ள ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளியில் சிலுவை ஒவ்வொரு வகுப்பறையிலும் மாட்டப்பட்டிருப்பது தங்களது மதச் சுதந்திரத்தை பறிப்பது போல் உள்ளதால், அவைகளை நீக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாகவும், அந்தப் பள்ளியை நடத்துபவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், இக்குடும்பம்  2002 ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாகவும் அவ்வழக்கின் தீர்ப்பு இச்செவ்வாயன்று இக்குடும்பத்திற்கு சாதகமாக அளிக்கப்பட்டுள்ளதெனவும் செய்திகள் கூறுகின்றன. 
இந்தத் தீர்ப்பை எதிர்த்து இத்தாலிய அரசும் மேல்முறையீடு செய்துள்ளது. சிலுவை என்பது இத்தாலி நாட்டின் வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றின் அடையாளம் என்று இத்தாலிய அரசு தன் வாதத்தைச் சமர்பித்துள்ளது. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து இத்தாலிய ஆயர் பேரவை, இத்தாலிய நாட்டின் பாரம்பரியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் சிலுவை வெறும் மதத்தின் அடையாளம் மட்டுமல்ல, அது இந்த நாட்டின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று என்று தன் கருத்தை வெளியிட்டுள்ளது. இக்கருத்துக்களை ஆதரித்துப் பேசிய அருட்தந்தை லொம்பார்தி கல்வி உலகிலிருந்து மதம் சார்ந்த மதிப்பெடுகளை நீக்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று கூறினார். ஐரோப்பிய வரலாற்றில் கிறிஸ்தவத்தின் ஈடற்ற பங்கை உலகறியும் எனவே, கிறிஸ்தவத்திற்கு உள்ள தனிப்பெரும் பங்கை இது போன்ற தீர்ப்புகள் அகற்ற முயலும் நோக்கத்தில் உள்ளன என்று அருட்தந்தை லோம்பார்தி மேலும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.