2009-11-04 14:53:22

உலக தாராளமயமாக்கல் புதிய கண்ணோட்டத்திற்கான சவாலை முன்வைக்கின்றது - வத்திக்கான் அதிகாரி


நவ.04,2009. உலக தாராளமயமாக்கல், பொருளாதாரத்தை மட்டும் பற்றியதல்ல, மாறாக அது மனிதனைப் பற்றியது என்பதால், அது நம்மில் புதிய கண்ணோட்டத்திற்கான சவாலை முன்வைக்கின்றது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
வருகிற திங்களன்று வத்திக்கானில் தொடங்கவிருக்கின்ற, அகதிகள் மற்றும் குடியேறிகளுக்கான மேய்ப்புப்பணி குறித்த நான்கு நாள் சர்வதேச கருத்தரங்கு குறித்து நிருபர்களிடம் விளக்கிய பேராயர் அந்தோணியோ வேலியோ, கத்தோலிக்கர்கள் குடியேற்றதாரை புதிய கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டி.யது அவசியம் என்று கூறினார்.
குடியேற்றதாரருக்கான திருப்பீட அவை நடத்தும் இவ்வுலக கருத்தரங்கு பற்றிப் பேசிய அந்த அவைத் தலைவர் பேராயர் வேலியோ, வாழ்க்கையின் மையக்கூறு ஆன்மீகம் என்பதை உணர்ந்திருக்கும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு மனிதனின், குறிப்பாக, அகதிகள் மற்றும் குடியேறிகள் போன்ற சமூகத்தில் நலிந்தவர்களை எவ்வாறு பாதுகாத்து மேம்படுத்துவது என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றார்.
வத்திக்கானில் நடைபெறவிருக்கின்ற இவ்வுலக கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ள உலகின் முன்னூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளில் 28 பேர் ஆசியர்கள். இந்தியா, மியான்மார், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், ஜப்பான், கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து வியட்நாம், சீனா ஆகிய பன்னிரண்டு ஆசிய நாடுகளைச் சேர்ந்தோர் பங்கு கொள்ளவுள்ளனர்.குடியேற்றதாரருக்கான திருப்பீட அவையின் கணிப்புப்படி, இன்று உலகில் குறைந்தது இருபது கோடிப் பேர் குடியேறிகள். இவர்களில் ஒரு கோடியே பத்து இலட்சம் பேர் அகதிகள். இரண்டு கோடிப் பேர் கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் 5 இலட்சம் முதல் 6 இலட்சம் பேர் குடியுரிமை இழந்தவர்கள்.







All the contents on this site are copyrighted ©.