2009-11-02 15:12:03

புனிதர்களுடனான ஐக்கியத்தில் வாழ்வது, மிகவும் அழகானதும் ஆறுதல் தருவதுமாக இருக்கின்றது, திருத்தந்தை


நவ.02,2009 புனிதர்களுடனான ஐக்கியத்தில் வாழ்வது, நாம் ஒருபொழுதும் தனியாக இல்லை என்ற உணர்வை ஏற்படுத்துவதால் அது மிகவும் அழகான மற்றும் ஆறுதல் தருகின்ற உண்மைத்தன்மையாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

அனைத்துப் புனிதர்கள் பெருவிழா சிறப்பிக்கப்பட்ட இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

நாம் மாபெரும் ஆன்மீகக் கூட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கின்றோம், இந்தக் கூட்டத்தில் ஆன்மீக ஒருமைப்பாடு மேலோங்கி நிற்கின்றது, ஒருவரின் நன்மைத்தனம் அனைவருக்கும் நன்மை பயப்பதாயும் அதேசமயம் பொதுவாக அனுபவிக்கும் மகிழ்ச்சி தனிப்பட்ட ஆட்களில் பிரதிபலிக்கின்றது என்றும் அவர் விளக்கினார்.

ஆதிகாலத் திருச்சபையில் மறைசாட்சிகளை நினைத்து கொண்டாடுவதாக இருந்த வழிபாட்டுமுறை, பின்னாளில் அனைத்துப் புனிதர்கள் பெருவிழாவாக மாறியது பற்றியும் எடுத்துரைத்த அவர், திருச்சபை புனிதர் என அறிவித்துள்ள, இன்னும் ஆண்டவருக்கு மட்டுமே தெரிந்த அநேகப் புனித குருக்கள் என எல்லாப் புனிதக் குருக்களையும் இந்தக் குருக்கள் ஆண்டில் நினைவுகூருவோம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இத்திங்களன்று இறந்த விசுவாசிகள் நினைவு கூரப்படுவதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, கல்லறைகளைத் தரிசிப்பது, இறந்த ஆன்மாக்கள் கடவுளின் கரங்களில் இருக்கின்றார்கள் என்பதை ஞாபகப்படுத்த வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்

இறந்தவர்களை நினைத்து செபிப்பதும், அவர்களைக் கௌரவிப்பதற்குமான சிறந்த வழி, விசுவாசமும் நம்பிக்கையும் பிறரன்பும் நிறைந்த செயல்களைச் செய்வதே" என்று அவர் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.

ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் பேசிய திருத்தந்தை, பத்து ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1999ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி உலக லூத்தரன் கூட்டமைப்புக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்குமிடையே இடம் பெற்ற கூட்டறிக்கை பற்றியும் தெரிவித்தார்.

இந்த அறிக்கை, கிறிஸ்தவர்கள் மத்தியில் முழு ஒன்றிப்பை அமைப்பதற்கான கடினமான பாதையில் இடம் பெற்றுள்ள ஒரு மைல்கல் என்று பாப்பிறை 2ம் ஜான் பவுல் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

நற்செய்தியின் மையம் மற்றும் நம் வாழ்க்கையின் முக்கிய கூறுகளைக் கொணரும் ஏற்புடைமை கோட்பாட்டின் அடிப்படை உண்மை பற்றிய இரு சபைகளுக்கிடையேயான இணக்கத்தை இந்த அறிக்கை கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.