2009-10-31 08:11:05

ஞாயிறு சிந்தனை


புனிதர் அனைவரின் பெருவிழா இன்று. புனிதர் யார், புனிதம் என்றால் என்ன... இவைகளைப் பற்றி சிந்திக்க நமக்கு ஒரு சந்தர்ப்பம்.

இருபத்து முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கடவுளே, தெய்வமே என்று யாராவது சப்தமாகச் சொன்னால், அவர் இந்த உலகத்தைக் கடந்து நிற்கும், தாண்டி நிற்கும் பரம் பொருளுடன் பேச முயற்சி செய்கிறார் என்று நினைத்துக்கொள்வோம். இந்த காலத்தில் கதையே வேறு. நான் பணி புரிந்த கல்லூரியில் நடந்து போகும் போது அவ்வப்போது மாணவர்கள் பேசுவது, அதுவும் சப்தமாக பேசுவது காதில் விழும். அந்த நேரங்களில் கடவுளே, தெய்வமே என்று சத்தம் கேட்டால், அது பரம் பொருளைக் கூப்பிடும் சப்தம் என்பதை விட தன் நண்பரைக் கூப்பிடும் சப்தமாகத் தான் இருக்கும். கடவுள், தெய்வம் என்ற சொற்களெல்லாம் மதம், செபம் என்ற வேலிகளைத் தாண்டி வெகு சாதரணமாக, சிலசமயம் கேலியாகவும் பயன்படுத்தக்கூடியச் சொற்களாகிவிட்டன.

பொதுவாகவே, நம் தமிழ்நாட்டில், எதையும், யாரையும் வானளாவப் புகழ்வது, எதையும் அளவுக்கு அதிகமாகப் பெரிது படுத்துவது நமக்குப் பழக்கமாகி விட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ் நாட்டில் ஒரு நடிகைக்குக் கோவில் எழுப்பியதாகக் கேள்விபட்டேன். நேரில் பார்த்ததில்லை. இது உண்மையானால், கோவில் என்ற வார்த்தைக்குக் களங்கம் விளைவிக்கும் செயல் அது. அப்படி கண்மூடித்தனமான பக்தி தமிழர்கள் மத்தியில் இருந்தது, இருக்கிறது. நடிக, நடிகையர் அல்லது விளையாட்டு வீரர்கள் படங்களுக்குப் பூஜைகள் போடும் செய்திகளைப் பார்த்திருக்கிறேன். மதிப்பு, மரியாதை இருக்க வேண்டியதுதான். ஆனால் இது போன்ற பக்தி? வேதனை தரும் ஒரு போக்கு.

இப்படி, கடவுள், தெய்வம், கோவில், பக்தி என்ற சொற்கள், கருத்துக்கள் மதம் என்ற சூழலைத் தாண்டி நடைமுறை வாழ்க்கையில் எளிதாக, சில சமயம் மனதைப் புண்படுத்தும் கேலியான வழிகளில் பயன்படுத்துவதைப் பார்க்கும் போது, கடவுளுக்கு இன்னும் இந்த உலகத்தில் இடம் இருக்கிறதா என்ற கேள்வி. கடவுளுக்கே இந்த கதி என்றால், மற்ற புனிதர்களைப் பற்றி சொல்ல வேண்டுமா? புனிதர்களைப் பற்றி சிந்திக்க இந்த ஞாயிறு சிந்தனையில் முயற்சி செய்வோம்.

புனிதர் என்ற வார்த்தைக்கு பதில் சில சமயம் பரிசுத்தர், தூயவர் என்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம். இங்கும் மதத்துடன் போட்டி போடும் வர்த்தக உலகத்தைப் பார்க்கலாம். அண்மையில் பார்த்த ஒரு சில விளம்பரங்கள் நினைவுக்கு வருகின்றன. துணி துவைக்கும் சோப், ஷாம்பூ, முகத்தில் தேய்க்கும் க்ரீம் என்று பல வகையான விளம்பரங்களில் பரிசுத்தம், தூய்மை போன்ற வார்த்தைகள் அதிகமாகவே பயன்படுத்தப்படுகின்றன. இப்படி நமது சாதாரண பேச்சுக்கும், வியாபாரத்திற்கும் பயன்படுத்தப்படும் இவ்வார்த்தைகளின் original அதாவது, அசலான, நிஜமான அர்த்தங்களைத் தேடி நமது சிந்தனைகளை செலவிடுவோம்.

பரிசுத்தர், தூயவர் என்றால், முழுவதும் சுத்தமானவர், மாசற்றவர், அப்பழுக்கில்லாதவர்... கள்ளம், கபடற்றவர் யார்? எந்த ஒரு மனிதரின் உள்ளும், புறமும் முழுவதுமாய் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கிறதோ, அவரே கபடற்றவர், மாசற்றவர். உள் ஒன்றும் புறம் ஒன்றுமாக வாழும்போது அழுக்கு சேரும், புனிதம் நீங்கும். கபடற்ற தன்மையை விளக்கப் பல உதாரணங்களைச் சொல்லலாம். ஒரே ஒரு உதாரணம். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாமல், மனதில் பட்டதை அப்படியே சொல்வது, அல்லது மனதில் பட்ட படி செயல் படுவது மாசற்றவருக்கு ஒரு உதாரணம். இது சாத்தியமா? என் வாழ்வைக் கொஞ்சம் திருப்பிப் பார்க்கிறேன். மிக, மிக அரிதாக இந்த நிலை சாத்தியமாகி இருக்கிறது. ஆனால், பெரும்பான்மையான நேரங்களில் மனதில் பட்டதைக் கொஞ்சம் கூட்டி, கழித்து... என் நான் தயங்கினேன்? என் இந்தக் கணக்கெல்லாம்? இந்த ஆராய்ச்சியின் முடிவில் வரும் ஒரே விடை - சுயநலம். என் சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தாம் இந்த பூசி மெழுகிப் பேசுவது, யோசித்து செயல்படுவது எல்லாம்.

உங்கள் மனதில் இப்ப ஒரு கேள்வி எழலாம். அப்ப மனசுல பட்டதெல்லாம் பேசி மத்தவங்க மனசைப் புண்படுத்தலாமா? நல்ல கேள்வி. நான் எண்ணிப் பார்க்கும் மனசு பண்பட்ட மனசு. அந்த மனசுல இருந்து வரும் சொல், செயல் எல்லாம் அவ்வளவு எளிதா மத்தவங்க மனசைப் புண்படுத்தாது. அப்படியே, புண் படுத்தினாலும் அது அறுவை சிகிச்சைபோல மற்றவரைக் குணப்படுத்தும் ஒரு வழியாகத்தான் இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை இயேசு இப்படிப்பட்ட கள்ளம் கபடற்றவர். அவரது உள்ளும் புறமும் ஒன்றை ஒன்று முழுவதும் பிரதிபலித்தது. அவர் நினைத்ததைச் சொன்னார், நினைத்ததைச் செயல்படுத்தினார். அவர் சொன்னது செய்தது எல்லாம், எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லையே. ஆனால், கொஞ்சமும் சுயநலம் இல்லாமல் அவர் வாழ்நாள் முழவதும் இருந்ததால், அவரால் அது முடிந்தது.

என்னால், உங்களால் முடியுமா? அவ்வப்போது முடியும். இந்த 'அவ்வப்போது' என்பதை 'எப்போதும்' என்று மாற்ற நாம் முயலும் போது புனிதம் நோக்கி போகிறோம் என்று அர்த்தம்.

புனிதம், பரிசுத்தம் இவற்றின் முதல் படி? சுயநலத்தை வாழ்க்கையிலிருந்து சுத்தம் செய்வது. இதை இயேசு இன்று கூறிய மலைப் பொழிவில் ஒரு பேறாகக் கூறுகிறார். "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்." தூய்மையான உள்ளம் திடீரென வானத்திலிருந்து குதித்து விடாது. நாம் பேணி வளர்க்க வேண்டிய ஒரு பொக்கிஷம். பெரும்பாலும் இதைப் பேணிகாக்க பல்வேறு துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். தூய்மைக்கும் துன்பத்திற்கும் அடிப்படை உறவு இருக்கிறது. கண்ணாடி, செம்பு, தோல், பஞ்சு இவை அடிபடும் போது என்ன நடக்கும்? கண்ணாடி ஒரு அடி தாங்காது. நொறுங்கிவிடும், செம்பு அடிபடும்பொது இன்னும் கடினமாகும், தோல் பதனிடும் இடத்தில், தோல் அதிகம் அடிபடும், அதனால் இன்னும் மிருதுவாகும். இறுதியாக, பஞ்சு... அடிமேல் அடி வாங்கும்போது மிக, மிக மிருதுவாகும். அதிகம் சுத்தமாகும். வாழ்க்கையில் நாம் அடிபடும் போது, என்னவாகிறோம்? கண்ணாடியாகவா? செம்பாகவா? தோலாகவா? பஞ்சாகவா?

அடிபட்டு மிருதுவாகி, தூய்மையாகும் பஞ்சை மனதில் வைத்துதான் இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லியிருப்பார். "தூய உள்ளத்தோர் ... "இவ்வளவு துன்பப்பட்டு, பஞ்சாக நைந்து போன உள்ளத்தில் இறைவனின் உருவம் ஆழமாய்ப் பதியும் என்பதைத் தான் இயேசு "இறைவனைக் காண்பர்" என்று சொன்னார். இறைவனைக் காண்பது மட்டுமல்ல. இறைவனைக் காட்டவும் செய்வது இந்த பஞ்சு உள்ளங்கள், பிஞ்சு உள்ளங்கள்.

உருவமற்ற கடவுளை எப்படி பார்க்க முடியும்? முன்பு ஒரு முறை கேட்ட கதை இது. குழந்தைகள் வகுப்பு ஒன்றில் எல்லா குழந்தைகளும் படம் வரைந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் வரைவதையும் சுற்றி பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் ஒரு குழந்தையிடம் வந்து கேட்டார். "என்னம்மா வரஞ்சுகிட்டிருக்கே?" "நான் கடவுளை வரையிறேன்." "கடவுளை யாரும் பார்த்ததில்லையே." என்று அந்த ஆசிரியர் சொல்லி முடிக்கும் முன்பு அக்குழந்தை சொன்னதாம்: "கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. நான் வரஞ்சதும் கடவுளைப் பார்க்கலாம்."

கடவுளைப் பார்ப்பது முடியுமா? முடியாதா? அவரவர் நிலையைப் பொறுத்தது.

கடவுளைப் பார்த்ததாக சொன்ன பலரைத் திருச்சபை புனிதராக உயர்த்தியிருக்கிறது. கத்தோலிக்க மறையில் மட்டும் அல்ல, பல மறைகளில் கடவுளைப் ஞானக் கண் கொண்டு அல்லது அகக் கண் கொண்டு பார்க்கும் வல்லமை கொண்டோரை ஞானி அல்லது புனிதர் என்று கூறியுள்ளனர். இவர்கள் உள்ளம் தூயதாய் அழுக்கெல்லாம் நீங்கப்பெற்றதாய் இருக்கும் போது அந்த மனம் இறைவனைக் காண்பது மட்டுமல்லாமல் இறைவனைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் மாறிவிடும். கடவுளின் மறு பிம்பங்களாகி விடுவார்கள் இவர்கள்.

"தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்."

புனிதத்திற்கு இலக்கணமாய் இறைமகன் கிறிஸ்து சொன்ன மலைப் பொழிவின் பேறுகள் எந்த விளக்கமும் இல்லாமல் புரிந்து கொள்ளும் மொழியில் உள்ளன. அந்த வார்த்தைகளுக்கு செவி மடுப்போம்.

"இயேசு கூறிய பேறுகள் மறு உலக வாழ்வைக் காட்டும் வரைபடம் அல்ல. மாறாக இவ்வுலகில் மாற்றான ஒரு வாழ்வைக் காட்டும் வரைபடம்." - Jacques Pohier , scripture scholar . இயேசு கூறிய பேறுபெற்றோர் என்ற மலைப் பொழிவு பலரது உள்ளங்களில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தி, மார்டின் லூத்தர் கிங் ஆகியோர் மலைப்பொழிவை அஹிம்சையின் இலக்கணம், காவியம் என்றெல்லாம் கூறியுள்ளனர். காந்தி தன் வாழ்வில் அடிக்கடி வாசித்து தியானித்த விவிலியப் பகுதி இந்த மழைப்பொழிவு என்று கூறுவர்.
இயேசுவின் மழைப்பொழிவு பற்றி பின்னர் ஒரு முறை இன்னும் ஆழமாகப் பேசலாம். இன்று, புனிதர்களைப் பற்றி சிந்திக்கும் போது, இயேசு சொன்ன "தூய உள்ளத்தோர்" என்ற அந்த ஒரு பேற்றினை, சவாலை மட்டும் ஏற்று முடிந்த வரை நம்மைத் தூய்மையாக்குவோம். தூய்மையான உள்ளத்தினராய், இறைவனைக் காண்போம், இறைவனை இந்த உலகுக்குக் காட்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.