2009-10-31 15:42:27

ஒரு மனிதன் மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சி, அதன் ஆன்மீக மற்றும் நன்னெறிக் கூறுகளையும் உள்ளடக்கியதாய் அமைய வேண்டும், திருத்தந்தை


அக்.31,2009 ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, அதன் பொருளாதாரத்தை மட்டும் வைத்து கணிக்கப்படாமல் முழு மனிதனையும் அவன் இயற்கையாகக் கொண்டுள்ள அனைத்துத் திறமைகளையும் நிறைவேற்றுவதை வைத்து கணிக்கப்படுமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருப்பீடத்துக்கான பல்கேரிய நாட்டுப் புதிய தூதுவர் நிக்கோலா கலுடோவிடமிருந்து இச்சனிக்கிழமை நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, பல்கேரியா நாடு, தான் அமைந்துள்ள பூகோள மற்றும் கலாச்சாரச் சூழல் காரணமாக அதன் அண்டை நாடுகள் மீதும் மிகவும் கரிசனையாக இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

பல்கேரியா, தன்னைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு மத்தியில் அமைதியான உறவுகளைக் கட்டி எழுப்புவதிலும் மனித உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதிலும், ஐரோப்பிய சமுதாய அவையுடன் உறவுகளை வளர்ப்பதிலும் முக்கியமான அங்கம் வகிக்கின்றது என்பதில் சந்தேகமே இல்லை என்று அவர் கூறினார்.

மக்களின் பொதுநலன் குறித்த அக்கறை, இக்கண்டத்தின் எல்லைகளுக்குள் முடங்கப்பட்டுவிடாமல் உலகத் தாராளமயமாக்கல் சார்ந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம் பெறுவதில் கவனம் செலுத்துமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

பல்கேரிய நாடு, ஜனநாயகத்தைத் தேர்ந்தெடுக்கவும், ஐரோப்பிய கண்டம் முழுவதுடன் சுதந்திரமாகவும் தனித்தும் உறவுகளைக் கொண்டிருக்கவும் வழி அமைத்த பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 20ம் ஆண்டு, இந்த 2009ம் ஆண்டில நினைவுகூரப்படுவதைத் திருத்தந்தை குறிப்பிட்டார்.

அந்நாடு, 2007ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி ஐரோப்பிய சமுதாய அவையுடன் இணைந்ததிலிருந்து எடுத்து வரும் பெரும் முயற்சிகளைத் தான் அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு சமயத்தவருடன் நேர்மையான மற்றும் உறுதியான உரையாடல் இடம் பெறுவது, நாட்டின் பொது நலனுக்கான பணிகளைத் திறம்படச் செய்ய உதவும் என்றும் கூறிய திருத்தந்தை, பல்கேரிய கத்தோலிக்க சமுதாயம் நாட்டின் பொது நலனுக்காகத் தன்னையே கையளிக்க மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது என்றும் புதிய தூதுவர் நிக்கோலா கலுடோவிடம் எடுத்துச் சொன்னார்.

 








All the contents on this site are copyrighted ©.