2009-10-30 16:11:19

சர்வதேச வானியல் ஆண்டின் கனிகள், படைப்பை வியப்பதைவிட படைத்தவர் பற்றிய வியப்புணர்வுக்கு இட்டுச் செல்லும், திருத்தந்தை நம்பிக்கை


அக்.30,2009 சர்வதேச வானியல் ஆண்டின் கனிகளாகிய படைப்பு பற்றிய வியப்பும் பேருவகை உணர்வும், படைப்பை வியப்பதைவிட படைத்தவர் பற்றிய வியப்புணர்வுக்கு இட்டுச் செல்லும் என்று தான் நம்புவதாகக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

படைப்பின் நோக்கமாகிய படைத்தவரின் உன்னதப் பேரன்பையும் இவை வியக்கத் தூண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

அக்டோபர் 30, 31 தேதிகளில் வத்திக்கானில் சிறப்பிக்கப்படும் சர்வதேச வானியல் ஆண்டின் ஒரு நிகழ்ச்சியாக, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் தன்னை சந்தித்த பன்னாட்டு வானியல் ஆய்வு நிபுணர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, கலிலேயோ கலிலெய், டெலஸ்கோப் கருவி மூலம் விண்கோள்களை நோக்கியதன் 400ம் ஆண்டைக் குறிப்பதாய் இச்சர்வதேச வானியல் ஆண்டு இடம் பெறுவதையும் குறிப்பிட்டார்.

16ம் நூற்றாண்டில் இடம் பெற்ற மாபெரும் கண்டுபிடிப்பை, உலகினர் அனைவரின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கத்தில் இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

வருங்காலச் சமுதாயம், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் இயற்கையையும் மதிப்பதற்கும், அவற்றை கவனமாகவும் பொறுமையுடனும் ஆய்வு செய்து நல்லவிதமாக அவற்றை நோக்கவும் இன்றைய சமுதாயத்திற்கு இருக்கும் கடமையையும் திருத்தந்தை கோடிட்டுக் காட்டினார்.

அக்காலத்திய உரோமன் கல்லூரி விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்கள், கிரகோரியன் நாட்காட்டி உருவாகக் காரணமாக இருந்ததையும் திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசினார்.








All the contents on this site are copyrighted ©.