2009-10-29 15:26:05

திருப்பீடம், ஈரான் இசுலாமிய குடியரசுடன் நல்லுறவை வளர்க்க விரும்புகிறது, திருத்தந்தை


அக்.29,2009 கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்தை அறிக்கையிடுவதற்கான சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதற்கு ஈரான் அதிகாரிகள் அறிந்தே இருக்கிறார்கள் என்று திருப்பீடத்துக்கான ஈரான் நாட்டுப் புதிய தூதுவரிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இவ்வியாழனன்று திருப்பீடத்துக்கான ஈரான் நாட்டுப் புதிய தூதுவர் அலி அக்பர் நசேரியிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, மதம் மற்றும் மனச்சான்றின் சுதந்திரங்கள் மற்றெல்லா சுதந்திரத்திற்கும் பாதை அமைக்கின்றன என்பதால், இவையிரண்டும் சர்வதேச அளவிலான உரிமைகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றன என்று கூறினார்.

திருப்பீடம், ஈரான் இசுலாமிய குடியரசுடன் நல்லுறவை வளர்க்க விரும்புவதாகவும், ஈரானின் மாபெரும் ஆன்மீக மரபு சர்வதேச சமூகத்துடனான நம்பிக்கை நிறைந்த ஒத்துழைப்புக்கு காரணமாக இருக்கின்றதெனவும் அவர் தெரிவித்தார்.

முதல் நூற்றாண்டுகளிலிருந்து கிறிஸ்தவம் அந்நாட்டில் இருந்து வருவது பற்றியும் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, ஈரானில் விசுவாசிகளின் ஆன்மீகத் தேவையை நிறைவேற்றுவதற்கு மேலும் குருக்களும் துறவிகளும் தேவைப்படுவதால் அதற்கு அந்நாட்டு அரசு ஆவன செய்யவும் புதிய தூதுவர் அலி அக்பர் நசேரியிடம் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.