2009-10-29 15:39:57

சீனாவில் மறைபணி புரிந்த மத்தேயோ ரிச்சி பற்றிய ஒரு கண்காட்சி


அக். 29, 2009 இத்தாலியில் பிறந்து, சீனாவில் மறைபணி புரிந்த மத்தேயோ ரிச்சி (Matteo Ricci) மறைந்த 400 வது ஆண்டு நினைவாக, வத்திக்கானில் அவரைப் பற்றிய ஒரு கண்காட்சி அக்டோபர் 29 ஆரம்பமானது. புனித பேதுரு வளாகத்தின் சார்ல்மாக்னே பகுதியில் நடைபெறும் இந்த கண்காட்சியை வத்திக்கான் நாட்டு நிர்வாகத் தலைவர் கர்தினால் ஜியோவான்னி லயோலா  திறந்துவைத்தார். சீனாவின் இத்தாலியத் தூதர் சுன் யுக்ஸி (Sun Yuxi) இந்தத் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். லி மாதோ (Li Madou ) என்று சீனர்களால் மரியாதையாக அழைக்கப்படும் மத்தேயோ ரிச்சி, மேலை நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு கலாச்சார பாலமாக அமைந்து செயல்பட்டார் எனவும், அவரைக் குறித்த கண்காட்சி பல நல்லுணர்வுகளை எழுப்புவதுடன், பயனுள்ள பல தகவல்களையும் மக்களுக்கு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுளதென வத்திக்கான் அருங்காட்சியக இயக்குனர் அந்தோனியோ பவோலுச்சி (Antonio Paolucci) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், பெய்ஜிங் நகரில் எழுப்பப்பட்டுள்ள Millennium அரங்கத்தில் சீன வலலாறு குறித்து வைக்கப்பட்டுள்ள கண்காட்சியில், பிற நாட்டைச் சார்ந்த மார்கோ போலோ, மத்தேயோ ரிச்சி இருவர் மட்டும் இடம் பெற்றிருப்பதாகக் கூறினார் திரு பவோலுச்சி. மத்தேயோ ரிச்சி பிறந்த இடமான மாசெராத்தா (Macerata ) மறைமாவட்ட ஆயர் Claudio Giuliodori  செய்தியாளர்களிடம் பேசுகையில், அருட்தந்தை ரிச்சி பயன்படுத்திய சமய உரையாடல், கலாச்சார ஏற்பு முறைகள் இன்றும் பின்பற்றக்கூடியவையே என்று எடுத்துரைத்தார். மத்தேயோ ரிச்சியை முத்திபேறுபெற்றவராக்கும் முயற்சிகள் தொடர்ந்து வருவதாகவும், அவரது 400வது ஆண்டு நினைவாக  மாசெராத்தாவிலிருந்து  பெய்ஜிங் நகருக்குத் திருப்பயணம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆயர் Claudio Giuliodori கூறினார். திருப்பீட பத்திரிக்கை அலுவலக இயக்குனர் இயேசு சபை குரு Federico Lombardi ரிச்சியை முத்திபேறுபெற்றவராக்கும் முயற்சிகள்  குறித்து தன் கருத்தைத் தெரிவித்த போது, அருட்தந்தை ரிச்சியின் போதனைகளைக் கேட்டு கிறிஸ்துவத்தைத் தழுவிய முதல் சீனராகிய Xu Guangqiயும் ரிச்சியோடு சேர்ந்து முத்திபேறுபெற்றவராக உயர்த்தப்படுவதைத் தான் விரும்புவதாகத் தெரிவித்தார். "மத்தேயோ ரிச்சி: ரோமைய, சீன வரலாறுகளின் உச்சி" என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி வத்திக்கான் அருங்காட்சியகம், இயேசு சபையின் தலைமை இல்லம், கிரெகோரியன் பல்கலைகழகம் ஆகிய மூன்றும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது என்றும்,  இந்த கண்காட்சி மக்கள் பார்வைக்கு அக்டோபர் 30 முதல் வரும் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி வரைத் திறந்துவைக்கப்பட்டிருக்கும் என்றும் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.