2009-10-28 15:51:50

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


அக். 28. திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம் திறந்த வெளியில், புனித ராயப்பர் பசிலிக்கா பேராலய வளாகத்தில் இடம் பெற்றது. கிரகோரியன் சீராக்கத்தின் துவக்க காலத்திலான இறையியல் புதுப்பித்தல் குறித்து இன்று நோக்குவோம்  என தன் மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட்.

மேற்கத்திய  நாடுகளில் ஆன்மீக, கலாச்சார மற்றும் அரசியல் மறுபிறப்பின் காலமாக 12ஆம் நூற்றாண்டு இருந்தது. இறையியலும் தன் பங்காக, தன் இயல்பு நிலை மற்றும் ஒழுங்கமைவு குறித்து மேலும் விழிப்புணர்வு பெற்றதால், புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டு, புனித தாமஸ் அக்வினாஸ் மற்றும் பொனவெந்தூரின் காலமான, இறையியலின் தலை சிறந்த படைப்புக்களைக் கண்ட 13ஆம் நூற்றாண்டிற்கு பாதை அமைத்தது. மத்திய கால பல்கலைக்கழகங்களின் முன்னோடியாக விளங்கிய பள்ளிகள் மற்றும் துறவு மடங்களுடன் தொடர்புடையதான  இறையியலின் இருவிதமான அடிப்படை முற்படிவங்கள் வெளிப்பட்டன. இயேசுவின் மறையுண்மையை மையம் கொண்டதாய், விவிலியம் மற்றும் திருச்சபை தந்தையர்களின் நூல்களில் காணப்படும் உள்ளார்ந்த ஐக்கியம் மற்றும் ஆன்மீக அர்த்தத்தை வலியுறுத்த, அவைகளின் மீது மேற்கொள்ளப்படும் ஜெபத்துடன் கூடிய ஆழ்ந்த தியானத்தின் வழியாக துறவுமட இறையியல் வளர்ந்தது. அதேவேளை, அறிவுபூர்வ சிந்தனை வழியிலான இறையியலோ பகுத்தறிவு வாதங்களைப் பயன்படுத்தியும், மூல ஆதாரங்களைக் குறித்து கற்றும், விசுவாசத்தைப் புரிந்து கொள்வதற்கு விளக்கமளிக்க முயன்றது. இதுவே "சும்மா" என்று அழைக்கப்படும் இறையியல் கருத்துக் கோர்வையான உயரிய படைப்புக்கு இட்டுச் சென்றது. இன்றும், பகுத்தறிவு மற்றும் விசுவாசத்திற்கு இடையேயான இவ்விணக்கத்தின் நம்பிக்கையே, நமக்குள் இருக்கும் நம்பிக்கை குறித்து விளக்கமளிக்க நம்மைத் தூண்டுவதாக உள்ளது. உண்மையின் முழுமையாய் இருக்கும் இறைவனைக் குறித்த அன்புடன் கூடிய ஆழ்ந்த தியானத்திற்கு மனித ஆவியை உயர்த்துவதற்கு பலம் வழங்கி, ஆய்வறிவு சுதந்திரமாகச் செயல்பட விசுவாசம் உதவுகிறது என்பதைக் காண்பிப்பதும் பகுத்தறிவு மற்றும் விசுவாசத்திற்கு இடையேயான நல்லிணக்கமே.

இவ்வாறு தன் புதன் போது மறைபோதகததை வழங்கிய திருத்தந்தை, அனைத்து மக்களுக்கும் தம் ஆசீரை வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.