2009-10-28 15:54:16

டில்லி உயர் மறைமாவட்டத்தின் குழந்தைகள் பாராளுமன்றம் பயிற்சிகள்


அக். 28, 2009 இந்திய அரசியல் அமைப்பு குறித்த பல விவரங்களையும், நடைமுறை அனுபவங்களையும் வழங்கும் நோக்கத்தோடு டில்லி உயர் மறைமாவட்டத்தின் சமூகப் பணி அமைப்பு சிறுவர், சிருமியருக்குப் பயிற்சிகள் அளித்து வருகிறது. “விழிப்பு” என்ற பொருள் படும் Chetanalaya என்ற இந்த அமைப்பினை நடத்தி வரும் இயக்குனர் அருட்தந்தை சூசை செபாஸ்டின் "குழந்தைகள் பாராளுமன்றம்" என்று அழைக்கப்படும் இந்த பயிற்சிகளில் இதுவரை 3000 சிறுவர், சிறுமியர் இணைந்துள்ளனர் என்று தெரிவித்தார். இப்பயிற்சிகள் இந்த இளம் உள்ளங்களில் அவர்களது உரிமைகளையும், கடமைகளையும் சொல்லித்தர ஒரு சிறந்த வழி எனக் கூறினார் அருட்தந்தை செபாஸ்டின். கிறிஸ்தவரல்லாத குழந்தைகளும் இணைந்துள்ள இந்தப் பயிற்சிகள் சிறப்பாக ஏழைகள் வாழும் சேரிகளிலும் நடத்தப்படுகிறது என்றும், இவைகளில் பங்கேற்பதால் அந்தந்த பகுதிகளில் காணக்கிடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைப்பதாகவும் அருட்தந்தை தெரிவித்தார். பால்யத் திருமணங்களைத் தடுத்து நிறுத்துதல், பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்தல் போன்ற பல நிறைவான செயல்பாடுகள் இக்குழந்தைப் பாராளுமன்றங்களால் நிறைவேற்றப் பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார், அருட்தந்தை செபாஸ்டின்.







All the contents on this site are copyrighted ©.