2009-10-28 15:53:06

சட்டிஸ்கர் மாநிலத்தில்  கிறிஸ்தவ பழங்குடியினர் வீடுகளையும், நிலங்களையும் இழக்கும் ஆபத்து 


அக். 28, 2009 சட்டிஸ்கர் மாநிலத்தில் வாழும் பல்லாயிரம் கிறிஸ்தவ  பழங்குடியினர் தங்கள் வீடுகளையும், நிலங்களையும் இழந்து போகும் ஆபத்தில் இருப்பதாக கூறுகின்றனர். அரசின் தொழிமயமாக்கும் முயற்சியின் ஒரு விளைவாக தங்கள் நிலங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், இயற்கை வளங்களையும், கனிமங்களையும் காப்பாற்றும் நோக்கிலும், அந்த மாநிலத்தின் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கத்திலும் இந்தப் பகுதிகளைத் தொழில் மயமாக்கும் முயற்சியில் ஈடுபடப் போவதாக சட்டிஸ்கர் அரசு இணையதளத்தின் மூலம் அறிவித்துள்ளது. ஆயினும் இந்த முயற்சி பெரும்பான்மையாய் இருக்கும் கிறிஸ்துவ மக்களையே அதிகம் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பது அம்மாநிலத்தின் திருச்சபையையும், கிறிஸ்துவத்தையும் பலகீனப்படுத்தும் ஒரு முயற்சியே என்று அரசின் முன்னாள் பணியாளர் பெனெடிக்ட் மிஞ்ஜ் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளாய் அரசு ரைகர் மறைமாவட்டத்தில் கத்தோலிக்கர்களிடமிருந்து அபகரித்துள்ள பல ஹெக்டேர் நிலங்களுக்கு இன்னும் எந்தவித ஈடும் அளிக்காதது கிறிஸ்துவர்கள் மேல் அரசின் மெத்தன போக்கைக் காட்டுகிறது என்று இயேசு சபை குரு சக்கரியாஸ் லாக்ரா தெரிவித்தார். அரசு நிலங்களை அபகரிக்கும் செயலைக் கண்டித்து இம்மாதம் பல்லாயிரம் பழங்குடியினர் மேற்கொண்ட போராட்டங்கள் எந்தப் பலனும் அளிக்காதது பெரும் ஏமாற்றமே என்று அருட்தந்தை லாக்ரா தெரிவித்தார். சட்டிஸ்கர் மாநிலத்தில் ஜஷ்பூர், ரைகார் மறைமாவட்டங்களில் அதிகமான கிறிஸ்தவ பழங்குடியினர் வாழ்ந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.