2009-10-24 17:27:39

ஆப்பிரிக்க ஆயர் பேரவைத் தந்தையர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை


அக். 24, 2009 ஆப்பிரிக்காவில் ஏழ்மையையும், மோதல்களையும் தூண்டும் பேராசை, ஊழல், மற்றும் அநீதியான பொருளாதார அமைப்புகள் போன்றவை நல்மனம் கொண்டோரின் ஒத்துழைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர் ஆப்பரிக்க ஆயர்கள்.
மூன்று வார சிறப்பு மாநாட்டை வத்திக்கானில் திருத்தந்தையுடனான இஞ்ஞாயிறு காலைத் திருப்பலியுடன் நிறைவு செய்யும் ஆயர் பேரவைத் தந்தையர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுநலனில் அக்கறை இல்லாத தலைவர்களின் தவறான முடிவுகளாலேயே ஏழ்மையும், துயரமும், மோதல்களும் அதிகரித்து வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
கருத்தடை சாதன பயன்பாட்டின் மூலம் HIV நோய்க்கிருமிகளையும் AIDS ஐயும் எதிர்த்து போரிட்டு வெற்றி காண முடியாது எனவும் தங்கள் இறுதி அறிக்கையில் கூறியுள்ள ஆயர்கள், இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடுகளில் மத சுதந்திரம் மதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர். ஏழை நாடுகளின் கடன் சுமை குறைக்கப்படுதல், சுற்று சூழல் பாதுகாப்பு, AIDS நோய் தொடர்புடைய திருச்சபை பணிகளில் ஆதரவு, திருமண வாழ்வில் விசுவாசமயிருத்தல், பிற மதங்களுடனான கலந்துரையாடல் போன்றவை ஊக்குவிக்கப் பட வேண்டும் என விண்ணப்பிக்கும் இவ்வறிக்கை, ஆப்பிரிக்க கண்டத்தில் எண்ணற்ற பிரச்சனைகள் இருந்தாலும் அது நம்பிக்கையுடனே நடைபோடுவதாகவும் தெரிவிக்கிறது.







All the contents on this site are copyrighted ©.