2009-10-23 18:05:56

"தலைமுறைகளுக்கான நீதி" எனும் அழைப்பை விடுத்தார் திருத்தந்தை


அக். 23, 2009 வருங்கால சந்ததியினரை மனதில் கொண்டு, "தலைமுறைகளுக்கான நீதி" எனும் அழைப்பை விடுத்தார் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட். 8 வது அகில உலக சமயம், அறிவியல், சுற்றுசூழல் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள கிரேக்க அர்தொடோக்ஸ் சபைத் தலைவர் முதலாம் பாத்தலோமேயுவுக்கு அனுப்பிய செய்தியில், வருங்கால தலை முறையினரும் இயற்கை அழகை ரசிப்பதற்கு உரிமை பெற்றவர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
வருகிற ஞாயிறு வரை அமேரிக்காவில், மெம்பிஸ் நகரில் நடைபெறும் இவ்வாண்டிற்கான கருத்தரங்கில் "மிஸிஸிப்பி நதியில் மீண்டும் சமநிலை உருவாக்க" என்பது மையப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அர்தொடோக்ஸ் சபைத் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சியைப் பாராட்டியத் திருத்தந்தை, மிஸிஸிப்பி போன்ற உலகின் பல்வேறு பெரும் நதிக்கரை ஓரங்களில் கலாச்சாரங்கள் ஆரம்பித்ததையும், நாம் வாழும் காலங்களில் மனித குலம் எடுக்கும் சில முடிவுகளால், நதிகளுக்குப் பெரும் ஆபத்து உண்டாவதையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தையும், தொழில் நுட்பத்தையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும் முன்னேற்றம், மனித வாழ்வின் ஏனைய அம்சங்களை மறந்து விடுகிறது. இதனால், இயற்கை பெருமளவில் பாதிக்கப்படுகிறது என்றுரைத்தத் திருத்தந்தை, சுற்றுச் சூழல் குறித்த முடிவுகள் நன்னெறியின் அடிப்படையில் எடுக்கப்படவேண்டும் என்றும், இதனால் நமது வருங்கால தலைமுறையினருக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் தன் செய்தியில் தெளிவுபடுத்தியுள்ளார். 2005ஆம் ஆண்டு கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பலருக்கும், சிறப்பாக ஏழைகளுக்கு, தன் செபங்களையும், ஆசீரையும் வழங்குவதாகக் கூறியத் திருத்தந்தை, அவர்கள் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்குத் தன் சிறப்பான அசீரை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.







All the contents on this site are copyrighted ©.