2009-10-21 16:07:18

திருத்தந்தையின் புதன் போது மறைபோதகம்


ரோம் நகரில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும்போது, இப்புதனன்று குளிர் சிறிது குறைவாக இருந்து, சூரியனும் மலர்ச்சியாக முகம் காட்டியதால், புனித ராயப்பர் பசிலிக்கா பேராலய வளாகத்திலேயே திருத்தந்தையின் இப்புதன் போது மறைபோதகம் இடம் பெற்றது.
மத்திய காலத்தின் இறையியலாளர்கள் குறித்து தொடர்ந்து இடம் பெற்று வரும் புதன் மறைபோதகத்தில் இவ்வாரம், புகழ்பெற்ற இறையியலாளர்களில் ஒருவரான Clairvaux இன் புனித பெர்னார்ட் குறித்து நோக்குவோம் என தன் போதகத்தைத் துவக்கினார் பாப்பிறை 16ம் பெனெடிக்ட்.
Cistercian துறவு வாழ்வு புதுப்பித்தலின் எளிமை நிலைகளோடு, தன் காலத்தைய திருச்சபை பணிகளுக்கானத் தீவிரச் செயல்பாடுகளை ஒன்றிணைத்தார் புனித பெர்னார்ட். இவரின் உயரிய கல்வி நிலையாலும், ஆழமான ஆன்மீகத்தாலும் இவர் திருச்சபையின் மறை வல்லுனரெனவும், பல வேளைகளில் திருச்சபைத் தந்தையர்களுள் கடைசியானவர் எனவும் அழைக்கப்படுகிறார். தன்னுடைய இறையியல் எழுத்துக்கள், மறையுரைகள் மற்றும் அவரின் புகழ்பெற்ற உன்னத சங்கீதங்கள் மீதான மறையுரைகளுடன், அவர் தன்னுடன் வாழ்ந்த ஏனைய இறையியல் வல்லுநர்களுடன் நல்ல தொடர்பையும், நட்புணர்வையும் கொண்டிருந்ததுடன், திருச்சபை படிப்பினைகளுக்காக வாதாடி, திருச் சபைக்கு எதிரான படிப்பினைகளையும், யூத விரோத போக்குகளையும் எதிர்த்தார். அவரது ஆன்மீகமானது கிறிஸ்துவையே மையம் கொண்டதாயும், ஆழ்ந்த ஆன்மீக சிந்தனைகளைக் கொண்டதாயும் இருந்தது. அதேவேளை, கிறிஸ்துவின் பெயரில் காணப்படும் இனிமையை அவர் கொண்டாடிப் போற்றியது அவருக்கு, இயேசுவின் புகழ் குறித்து தேனொழுகப் பேசினார் என்ற அர்த்தத்தில் திருச்சபையின் Mellifluus மறைவல்லுனர் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.
புனித பெர்னார்ட், அன்னைமரி மீது ஆழமான பக்தி கொண்டிருந்தார். மற்றும் இயேசுவின் பலியில் அன்னை மரியின் நெருங்கியப் பகிர்தல் குறித்தும் ஆழமாக அறிந்திருந்தார். ஜெபம், கல்வியறிவு, மற்றும் ஆழமான தியானத்தால் ஊட்டம் பெற்றிருந்த புனித பெர்னார்டின் விசுவாச எடுத்துக்காட்டு, நம்மை அன்னை மரியின் மூலம் இயேசுவின் அருகாமையில் எடுத்து செல்வதாக. அதே எடுத்துகாட்டு, வானகத்தில் உள்ள புனிதர்கள் குறித்த அறிவில் தன் மகிழ்ச்சிநிறை நிறைவைக் காணும் ஞானத்தை நமக்கு வழங்குவதாக.  இவ்வாறு தன் மறைபோதகததை புனித ராயப்பர் பசிலிக்காப் பேராலயத்தில் கூடியிருந்த ஏறத்தாழ நாற்பதாயிரம் பேருக்கு வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார்.







All the contents on this site are copyrighted ©.