2009-10-21 16:33:38

கத்தோலிக்கத் திருச்சபையில் முழுமையாக இணைய வேண்டுமென்ற ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையினரின் செபம் மிக அதிகமாகவே கேட்கப்பட்டுள்ளது, பாரம்பரிய ஆங்கிலிக்கன் ஒன்றியத்தின் தலைவர் மகிழ்ச்சி


அக்.21,2009 உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் முழுமையாக இணைய வேண்டுமென்ற ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையினரின் செபம் மிக அதிகமாகவே கேட்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய ஆங்கிலிக்கன் ஒன்றியத்தின் தலைவர் கூறினார்.

ஆங்கிலிக்கன் சபையின் ஆன்மீக மற்றும் திருவழிபாட்டுத் தனித்தன்மைகளுடன் அச்சபையினர் கத்தோலிக்கத் திருச்சபையில் முழுமையாக இணைவதற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனுமதியளித்திருப்பது குறித்த வத்திக்கான் அறிவிப்புக்குப் பதிலளித்த ஆங்கிலிக்கன் பேராயர் ஜான் ஹெப்வெர்த் இவ்வாறு கூறினார்.

கத்தோலிக்கத் திருச்சபையில் சேருவதற்கு விண்ணப்பித்த ஆங்கிலிக்கன் சபை உறுப்பினர்களுக்குப் பதில் அளிப்பதாக வத்திக்கானின் இந்த அறிவிப்பு இருப்பதாகவும் ஆஸ்திரேலிய பேராயர் ஹெப்வெர்த் கூறினார்.

திருத்தந்தையின் இந்தத் தாராள மனப்பாங்கு, பாரம்பரிய ஆங்கிலிக்கன் சபை ஒன்றிய அமைப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இருபது முதல் முப்பது ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை ஆயர்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைவது குறித்து விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.