2009-10-19 14:51:26

நம்பிக்கையின் செய்தியைக் கொண்டுள்ள திருச்சபை, அதனை அனைத்து மனித சமுதாயத்துக்கும் அறிவிக்க விரும்புகிறது, திருத்தந்தை


அக்.19,2009 நம்பிக்கையின் செய்தியைக் கொண்டுள்ள திருச்சபை, அதனை அனைத்து மனித சமுதாயத்துக்கும் அறிவிக்க விரும்புகிறது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானத் திருப்பயணிகளிடம் உலக மறைபரப்பு ஞாயிறு பற்றி விளக்கிய திருத்தந்தை, இந்த உலக மறைபரப்பு ஞாயிறானது, ஒவ்வொருவருக்கும், குறிப்பாக இன்னும் நற்செய்தியை அறியாதவர்களுக்கு அதனை அறிவிக்கவும் அதற்கு சான்று பகரவும் ஒவ்வொரு திருச்சபை சமூகத்திற்கும் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் இருக்கும் பொறுப்பை அழுத்தமாக நினைவுபடுத்துவதாக இருக்கின்றது என்று கூறினார்.

இஞ்ஞாயிறுக்கென்று தான் வெளியிட்ட செய்தியையும் நினைவுபடுத்திய அவர், நன்மைத்தனமும் இரக்கமும் நிறைந்த ஒரே கடவுளின் தந்தைத்துவத்தின் கீழ் நாடுகளை நீதியிலும் அமைதியிலும் இட்டுச் செல்வதாக இருந்தது என்றும் கூறினார்.

இக்காலத்தில் மாபெரும் சாதனைகளை சாதித்து வரும் மனுக்குலம் தனது இறுதி இலக்கு பற்றிய உணர்வை இழந்தது போல் தெரிகின்றது, இந்த மனித சமுதாயத்துக்கு நம்பிக்கையின் நற்செய்தியை அறிவிப்பதற்காகவே திருச்சபை இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

தூய ஆவியில் நீதியும் அமைதியும் மகிழ்ச்சியுமான இறையரசு நற்செய்திப் பணியான இயேசுவின் பணியைத் தொடர்ந்து செய்வதற்குத் திருச்சபை அழைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், மறைப்பணித்தளங்களில் அடக்குமுறையினால் துன்புறும் மறைபோதகர்களை, குறிப்பாக பிரேசிலில் கொல்லப்பட்ட அருட்திரு Ruggero Ruvoletto, பிலிப்பைன்சில் கடத்தப்பட்டுள்ள அருட்தந்தை மைக்கிள் சினோட் ஆகியோரையும் சிறப்பாக நினைவுகூர்ந்தார் அவர்.

அனைவரும் இளம் ஏழைத் திருச்சபைகளுக்கு பொருள் உதவியும் ஆன்மீக உதவியும் செய்யவும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

அக்டோபர் 18, நற்செய்தியாளரும் திருத்தூதர்கள் பணி நூலை எழுதியவருமான புனித லூக்காவின் விழாவுமாகும், இவர் கிறிஸ்தவ செய்தி உலகின் கடைக்கோடி வரை பரவுவதற்கு உதவியுள்ளவர், கிறிஸ்துவின் ஒளி தொடர்ந்து எல்லா மக்களிலும் பரவ, திருச்சபைத் தனது பணியைத் தொடர, மறைப்பணித் தளங்களுக்குப் பாதுகாவலர்களான புனிதர்கள் பிரான்சிஸ் சவேரியார், புனிதை குழந்தை தெரேசா ஆகியோரின் பரிந்துரையை வேண்டுவோம் என்றும் திருத்தந்தை விசுவாசிகளிடம் கேட்டுக் கொண்டார்.

அண்மை வாரங்களாக வத்திக்கானில் நடை பெற்று வரும் ஆப்ரிக்காவுக்கான சிறப்பு ஆயர் பேரவைக்காகச் செபிக்கவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.