2009-10-16 17:05:32

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கு இந்துக்களும் கிறிஸ்தவரும் சேர்ந்து உழைக்குமாறு திருப்பீட பல்சமய உரையாடல் அவை அழைப்பு


அக்16,2009 ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கு இந்துக்களும் கிறிஸ்தவரும் சேர்ந்து உழைக்குமாறு திருப்பீட பல்சமய உரையாடல் அவை கேட்டுக் கொண்டுள்ளது.

அக்டோபர் 17, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் தீபத்திருநாளை முன்னிட்டு செய்தி வெளியிட்ட திருப்பீட பல்சமய உரையாடல் அவை, அனைத்து இந்துமத நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, இந்த ஒளிவிழா நம் அனைவரது இதயங்களையும் உன்னத ஒளியாம் இறைவன் பக்கம் திருப்பட்டும் எனக் கூறியுள்ளது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் என்பது, ஒருவர் ஒருவருடன் பகிர்ந்து வாழும் பொறுப்புணர்விலிருந்து பெறப்படுவது, ஒத்துழைப்புடன்கூடிய செயல்பாட்டிலிருந்து கிடைப்பது என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.

ஒருவர் ஒருவரை மதிப்பதென்பது, ஒருவர் ஒருவரின் மனச்சான்றின் சுதந்திரம், எண்ணச் சுதந்திரம், சமய சுதந்திரம் ஆகியவற்றை அங்கீகரிப்பதாகும், மனிதர் தாங்கள் சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படும் போது மட்டுமே

அவர்கள் பிறரோடு தொடர்பு கொள்ள முடியும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்காக உழைக்க முடியும் என்றும் தீபாவளிக்கான அச்செய்தி கூறுகிறது.

எனவே நன்மனம் கொண்ட மக்கள் என்ற விதத்தில் நாம் அனைவரும், ஒருங்கிணைந்த வாழ்வுக்கும், சமய நல்லிணக்கத்திற்கும், ஒவ்வொரு மனிதனின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் இருளை அகற்றுவதற்கு சேர்ந்து செயல்படுவோம் என்றும் அச்செய்தி அழைப்பு விடுக்கிறது.

தீபாவளியானது, நன்மை தீமையின் மீதும் ஒளி இருளின் மீதும் வெற்றி கொள்வதை உறுதியுடன் அறிவிக்கும் தருணமாக இருக்கின்றது என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவை கூறியது.

திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் ஜான் லூயி தவ்ரான், அவ்வவைச் செயலர் பேராயர் பியர் லூயிஜி செலாத்தா ஆகியோர் ஆகியோர் தீபாவளிக்கான இச்செய்தியில் கையெழுத்திட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.