2009-10-16 17:07:44

அனைத்துச் சிறாரையும் அவர்களின் குடும்பங்களையும் பாதுகாப்பதில் நாடுகள் மிகுந்த கவனம் செலுத்தத் திருப்பீட உயர் அதிகாரி அழைப்பு


அக்16,2009 அனைத்துச் சிறாரும் தங்களின் மாண்புடன், ஆரோக்யமான மற்றும் நிலையான சூழலில் வாழ்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளார்கள் என்பதால், அவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பாதுகாப்பதில் நாடுகள் மிகுந்த கவனம் செலுத்துமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.பொது அவையில் வலியுறுத்தினார்.

“குழந்தைகளின் உரிமைகளை ஊக்குவித்து பாதுகாப்பது” குறித்த ஐ.நா.பொது அவையில்

இவ்வியாழனன்று உரையாற்றிய ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தீனோ மிலியோரே இவ்வாறு கூறினார்.

ஒவ்வொரு குழந்தையின் வாழ்வில் பெற்றோரின் முக்கியமான பங்கும், ஒரு தாய், ஒரு தந்தை இவர்களிடம் பிறக்கும் குழந்தையைக் கொண்ட குடும்பத்தின் முக்கியத்துவமும் நாடுகளின் சட்டங்களில் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமென்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சிறாருக்கு எதிரான வன்முறைகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் குடும்பங்களுக்கு இருக்கும் நியாயமான பொறுப்பிற்குச் சமூகங்களும் நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டுமென்றும் பேராயர் மிலியோரே கேட்டுக் கொண்டார்.

கடந்த 20 ஆண்டுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்திருக்கும் செய்தி மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது, அதேசமயம் கடந்த பத்தாண்டுகளில் இருபது இலட்சத்துக்கு மேலான சிறார் ஆயுதம் தாங்கிய மோதல்களில் இறந்துள்ளனர் மற்றும் அறுபது இலட்சம் சிறார் ஊனமாகியுள்ளனர் என்பது கவலை தருகின்றது என்றும் பேராயர் கூறினார்.

நிலக்கண்ணி வெடிகளால் பல்லாயிரக்கணக்கான சிறார் ஊனமாகியுள்ளனர் மற்றும் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் பேராயர் மிலியோரே கூறினார்.










All the contents on this site are copyrighted ©.