2009-10-15 16:56:17

மறைபரப்பு மாநாடு மும்பையில் ஆரம்பமானது 


அக். 15, 2009 "பிரபு ஜேசு மஹொத்ஸொவ்" என்று அழைக்கப்படும் மறைபரப்பு மாநாடு மும்பையில் ஆரம்பமானது. "உங்கள் ஒளி மாந்தர் முன் ஒளிரட்டும்" என்ற மையப் பொருள் கொண்ட இம்மாநாட்டைத் திருத்தந்தையின் பிரதிநிதியாக, பேராயர் பேத்ரோ லோபெஸ் க்வின்தானா மும்பையின் புனித பத்திநாதர் கல்லூரியில் அக்டோபர் 14 அன்று துவங்கி வைத்தார்.

மறைந்த திருத்தந்தை 2 ஆம் ஜான் பால், கண்டங்கள் அளவில் மறைபரப்பு மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறிய பரிந்துரையே இம்மாநாட்டினை ஏற்பாடு செய்யத் தூண்டுதலாய் இருந்ததென மாநாட்டைத் தலைமை ஏற்று நடத்தும் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேஷியஸ் கூறினார்.

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரான கர்தினால் வர்கி விதயாத்தில் கிறிஸ்துவுக்கு துணிவுடன் சாட்சியம் அளிக்கும்படி மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார். கிறிஸ்துவின் மதிப்பீடுகளும் நற்செய்தி படிப்பினைகளும் இந்தியாவில் ஆழமாய் வேரூன்றுவதற்கு மூன்று ரீதித் திருச்சபைகளும் இணைந்து நடத்தும் இம்மாநாடு நல்லதொரு நம்பிக்கையைத் தரும் முயற்சி என கர்தினால் விதயாத்தில் கூறினார்.

இந்தியாவின் 160 மறைமாவட்டப் பிரதிநிதிகள், நூற்றுக்கும் மேலான ஆயர்கள், குருக்கள், துறவியர் என 1500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாடு இந்தியாவில் முதல் முறையாக மூன்று ரீதி திருச்சபைகளும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சி என்றும், இது நான்கு நாட்கள் நடைபெறும் என்றும் இந்திய ஆயர்கள் பேரவையின் செய்திக்குறிப்பு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.