2009-10-15 16:56:04

ஆப்ரிக்காவின் முக்கிய நம்பிக்கை - ஆப்ரிக்காவின் சிறப்பு ஆயர் பேரவை


அக்15,2009 ஆப்ரிக்காவின் முக்கிய நம்பிக்கை அக்கண்டத்தில் வாழும் இளையோர்களே என்றும், அதனால் அவர்களைச் சிறப்பான வகையில் பாதுகாக்க வேண்டுமெனவும் உகாண்டாவின் குலு உயர்மறைமாவட்ட பேராயர் ஜான் பாப்டிஸ்ட் ஒடாமா கூறினார்.

ஆப்ரிக்காவின் சிறப்பு ஆயர் பேரவையில் உரையாற்றிய பேராயர் ஒடாமா, சிறுவர், சிறுமியர் வன்முறையிலும், தவறான வழிகளிலும் வாழ்வைச் சீரழிக்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்றும், பசி, பட்டினி, கல்வியின்மை ஆகிய சமுதாயப் பிரச்சனைகளால் சிறியோர் அதிகமாய்ப் பாதிக்கப்படுவதால் பல்வேறு சமூக விரோதக் குழுக்கள் இவர்களைத் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார்.

குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் மற்றொரு வன்முறை கருக்கலைப்பு என்று கூறிய பேராயர், இவ்விதக் கொடுமைகளிலிருந்து குழந்தைகளையும், சிறியோரையும் பாதுகாக்க ஆயர்களுக்கும் ஆப்ரிக்கத் திருச்சபைக்கும் சிறப்பான வேண்டுகோள் விடுத்தார்.

மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகிய இருவரும் இளையோர்க்குச் சிறப்பான முக்கியத்துவம் கொடுத்ததை நன்றியோடு நினைவுகூர்ந்த ஆப்ரிக்க ஆயர்கள் உலக இளையோர் தினங்கள் அனுசரிக்கப்படுவதன் மூலம் இளையோர் வழியாக பல்வேறு நாடுகள் மத்தியில் ஒப்புரவு ஏற்பட்டு வருகிறது. இனியும் இம்முயற்சிகள் தொடர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.