2009-10-14 16:14:28

முத்திபேறு பெற்ற அன்னை தெரசாவின் உடலை அல்பேனியா அனுப்ப  இந்திய அரசு மறுப்பு  


அக்.14,2009 முத்திபேறு பெற்ற அன்னை தெரசாவின் உடலைத் தங்கள் நாட்டுக்கு அனுப்பும்படி அல்பேனியா நாடு அண்மையில் இந்தியாவைக் கேட்டுக் கொண்டதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

வெளியுறவுத் துறையின் பிரதிநிதியாக, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த விஷ்ணு பிரகாஷ் "மறைந்த அன்னை தெரசா இந்தியக் குடியுரிமை பெற்றவர். எனவே அவர் தான் தேர்ந்து கொண்ட நாட்டிலேயே துயில் கொள்வது தான் பொருத்தம்." என்று கூறினார்.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அன்னை தெரசா பிறந்து நூறு ஆண்டுகள் நிறைவுருவதை யொட்டி அல்பேனியாவின் பிரதமர் சாலி பெரிஷா (Sali Berisha ) இந்த விண்ணப்பத்தை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாகவும், இந்தியா இவ்விண்ணப்பத்தை ஏற்க மறுத்துள்ள தாகவும் செய்தி குறிப்பு ஒன்று கூறுகிறது.

இது குறித்து செய்தியாளர்கள் பிறரன்பு மறைபோதாக சபை என்று அழைக்கப்படும் அன்னை தெரசா சபையின் கன்னியர்களைக் கேட்டபோது, தங்களுக்கு எந்த வித அதிகாரப் பூர்வமானத் தகவல்கள் இல்லாததால் இது குறித்து எந்த கருத்தும் வெளியிட விரும்ப வில்லை என தெரிவித்தனர்.
அன்னை தெரசா உயிரோடிருந்த போது, கொல்கத்தாவில் தன்னைப் புதைக்குமாறு வேண்டிக்கொண்டதை நினைவு கூர்ந்த கொல்கத்தாவின் முன்னாள் பேராயர் ஹென்றி டிசூசா (Henry D 'Souza ) கொல்கத்தாவின் மக்களோடு தன்னையே முற்றிலும் ஐக்கியப் படுத்திக் கொண்ட அன்னை தெரசாவின் கல்லறைக்கு இன்றும் அந்நகர மக்கள் ஆயிரக் கணக்காய் வந்த வண்ணம் உள்ளனர். எனவே அன்னையின் உடலை வேறு எங்கும் கொண்டு செல்வது பொருந்தாது என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.