2009-10-14 16:15:07

பராக் ஒபாமா கருவில் வளரும் குழந்தைகளுக்கு எதிரான போரையும் நினைவுகூர வேண்டும் - திருப்பீட சார்பு தினத்தாள் 


அக்.14,2009 அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பராக் ஒபாமா, 2009ம் ஆண்டுக்கான நொபெல் அமைதி விருதை ஏற்றுள்ளதன் மூலம், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இடம் பெறும் போர்களை மட்டுமல்லாமல், கருவில் வளரும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் போரையும் நினைவுகூர வேண்டும் என்று திருப்பீட சார்பு தினத்தாள் ஒசர்வாத்தோரே ரொமானோ வலியுறுத்தியது.

ஒபாமாவுக்கு வழங்கப்பட்டுள்ள நொபெல் அமைதி விருது பற்றிக் கருத்து தெரிவித்த ஒசர்வாத்தோரே ரொமானோ, மக்கள் மத்தியில் ஒத்துழைப்பையும் சர்வதேச அளவில் நல்லுறவுகள் உறுதிப்படுத்தபடவும் ஒபாமா எடுத்து வரும் அசாதாரண முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியது.

கருக்கலைப்பு, அமைதியை அழிக்கும் மாபெரும் கருவி என்று, 1979ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற அன்னை தெரேசா கூறியதையும் அத்தினத்தாள் குறிப்பிட்டது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே 67 ஆயிரம் அமெரிக்க ஐக்கிய நாட்டு படைவீரர்கள் உள்ளவேளை, வருகிற டிசம்பருக்குள் மேலும் 1000 வீரர்களை அனுப்புவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.