2009-10-14 16:22:44

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்.


அக். 14. திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் தன் இவ்வார புதன் பொது மறைபோதகத்தில், 12ம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் வாழ்ந்த திருச்சபையின் புகழ் பெற்ற குளுனியின் துறவியான வணக்கத்துக்குரிய பீட்டர் பற்றி எடுத்துரைத்தார்.

திருச்சபைக்கான தன் பணியில் பீட்டர் எண்ணற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும், அவருக்கென பல்வேறு பொறுப்புகள் இருந்தபோதிலும், அவர் எப்போதும் ஆழ்ந்த தியான உணர்வுடையவராய், ஆழ்மன அமைதி கொண்டவராய், தீவிர துறவு வாழ்வையும் நல்ல நட்புணர்வையும் பேணுபவராய் செயல்பட்டார். கடவுள் மீதான அன்பையும் அடுத்தவர் மீதான அன்பையும் ஒன்றிணைத்துப் பார்க்கத் தெரிந்த அவரின் அவ்வுயர் தகுதி, திருச்சபையில் ஓர் உயிரோட்டமான அர்த்தத்தைக் கண்டது. கிறிஸ்துவின் மறையுடலின் அங்கத்தினர்கள் அனைவரும், அகில உலகத் திருச்சபையின் துன்பங்கள், துயர்கள் குறித்து அக்கறையுடையவர்களாய் இருந்து செயல்படவேண்டும் என வலியுறுத்திய அவர், திருச்சபைக்கு வெளியே இருந்தவர்கள் மீது, குறிப்பாக யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவராய் இருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் இது மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாக, குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒன்றாக இருந்தது. கிறிஸ்துவின் வாழ்வு மறையுண்மைகள் மீதான தியானம் மற்றும் துறவுமட திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் வழி ஊட்டம் பெற்ற பீட்டரின் இறையியல் மற்றும் ஆன்மீகத்தின் இதயமாக ஜெபமே நின்றது. குளூனியில் இயேசுவின் உருமாற்ற விழாவை அறிமுகப்படுத்திய இவர், இயேசுவின் மகிமை நிறை முகத்தை தியானிப்பதை மையமாக வைத்து அவ்விழாவிற்கான ஜெபங்களை வடித்தார். ஜெபத்தையும் தியான வாழ்வையும் அயலாருக்கான அன்போடும் சமூக புதுப்பித்தலுக்கான அர்ப்பணத்தோடும் இணைத்துப் பார்க்கும் திறமை பெற்ற வணக்கத்துக்குரிய பீட்டர், பெனடிக்டன் துறவியரின் கொள்கைகளை பிரதிபலிப்பவராயும், இன்றைய நெருக்கடி நிறை சமூகத்தில் முழுமையிலும், புனிதத்துவத்திலும் வாழ்வதற்கான கிறிஸ்தவர்களின் எடுத்துக்காட்டாயும் உள்ளார்.

இவ்வாறு புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.