2009-10-10 16:17:28

நொபெல் அமைதி விருது பெற்றுள்ள அரசுத் தலைவர் ஒபாமாவிடம் வத்திக்கான் அதிக எதிர்பார்ப்பு


அக்.10,2009 அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பராக் ஒபாமாவுக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது, வத்திக்கானுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ள அதேசமயம் அவரிடமிருந்து அதிகமான நம்பிக்கைகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் திருப்பீடப் பேச்சாளர் கூறினார்.

சர்வதேச அளவில் அமைதியை ஊக்குவிப்பதற்கான ஒபாமாவின் அர்ப்பணம், குறிப்பாக அணு ஆயுதக்களைவை ஊக்குவிப்பதற்கான அவரின் அண்மை நடவடிக்கைகள் ஆகிய இவற்றின் அடிப்படையில் இந்த நொபெல் அமைதி விருதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக இயேசு சபை அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி நிருபர்களிடம் கூறினார்.

இந்த மிகவும் முக்கியமான அங்கீகாரம், வருங்கால சமுதாயத்திற்கான அர்ப்பணத்திற்கு பெரிதும் ஊக்குமூட்டுவதாக இருக்கின்றது, இதன் மூலம் எல்லாரும் விரும்புகின்ற பலன்கள் கொணரப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், ஒபாமாவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நொபெல் அமைதி விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த, ஆப்ரிக்காவுக்கான சிறப்பு ஆயர் பேரவையில் பங்கு கொள்ளும் அட்லாண்டா பேராயர் வில்ட்டன் கிரஹரி, இவ்விருது மிகப்பெரும் பணியைச் செய்வதற்கு அரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளது என்று கூறினார்.

இது குறித்து பாராட்டிப் பேசிய, ஆப்ரிக்காவின் கானா நாட்டுப் பேராயர் சார்லஸ் பால்மர்-பக்கில், ஆப்ரிக்கர்கள் மற்றும் ஆப்ரிக்க வம்சாவழியினரின் அறிவுத் திறமைகளையும் வல்லமையையும் அங்கீகரிப்பதாய் இருக்கின்றது என்று கூறினார்.

உலகிலே மிக மதிப்புமிக்க இந்த நொபெல் அமைதி விருது ஒரு தங்கப்பதக்கத்தையும் ஒரு சான்றிதழையும் 14 இலட்சம் டாலரையும் உள்ளடக்கியது.

2009ம் ஆண்டின் இவ்விருதுக்கு 205 பேர் பரிந்துரை செய்யப்பட்டிருந்த வேளை ஐந்து பேர் கொண்ட இவ்விருது வழங்கும் குழு ஒபாமாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.