2009-10-10 16:38:47

தொழுநோயாளர்களின் அப்போஸ்தலர்


அக்.11,2009 மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார். மனித மனம், அந்தஸ்து அதிகாரம் பட்டுடை பதவி பவுசு சொத்து சூழ நிற்கும் மனிதர்களை மதிக்க முன்வருகிறது. ஆனால் எளிய உடைகளுக்குள் ஏற்றமிகு சிந்தனைகளுடன் சமூக அக்கறையுடன் கூடிய திட்டங்களுடன் மனதுக்குள் இலட்சிய பாதை வகுத்துக் கொண்டு பிடிப்புடன் பாதம் பதித்துச் செயல்படுகிறவர்கள் அநேகர் இருக்கின்றார்கள். அவர்கள் சமூகத்தால் எளிதில் அடையாளம் காணப்படுவதில்லை. எனினும் காலதேவன் அவர்களைக் கணக்கில் எடுத்து நமக்கு அடையாளப்படுத்தி விடுகிறான். காரணம் இவர்கள், கடவுள் செய்ய விரும்புவதை உள்ளுணர்ந்து செய்ய முன்வருகிறார்கள், செய்கிறார்கள். இத்தகையோருள் ஒருவர் புனித தமியான். திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறன்று புனிதர்கள் என்று அறிவித்துள்ள ஐவரில் ஒருவர் இவர்.

ஜோசப் தெ வூஸ்டர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1840ம் ஆண்டு ஜனவரி 3ம் நாள் பெல்ஜியத்தில் பிறந்தார். விவசாய மற்றும் வணிகக்குடும்பத்தில் பிறந்த ஜோசப், தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக துறவு பூண்டு லுவெய்யினில் இயேசு மரி திரு இதயங்களின் சபையில் சேர்ந்தார். தமியான் என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டார். இதே சபையில் சேர்ந்திருந்த இவரது சகோதரர் 1863ம் ஆண்டு ஹவாய்த் தீவுகளுக்கு மறைபோதகராகச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் உடல்நலம் குன்றியமையால் அவரால் புறப்பட இயலவில்லை. எனவே தமியான் முன்வந்து அங்கு சென்றார். ஹவாய்த் தீவுகளின் ஹோனலூலுவில் குருவாகவும் திருநிலைபடுத்தப்பட்டார். அச்சமயத்தில் ஹவாய்த் தீவுகளுள் தொழுநோயை ஒழிக்க விரும்பிய அரசு, இந்நோய்க் கிருமிகளுடன் வாழ்வோரை மொலாக்காய் என்ற மற்றொரு தீவுக்கு அனுப்பி வைத்தது. அங்கு தொழுநோயாளர் மத்தியில் சேவையாற்ற தன்னையே மனமுவந்து கையளித்த முதலாவது நபர் அருள்திரு தமியான். 16 வருடங்கள் அங்கு சேவை செய்த அவர், இறுதியில் தானும் அந்நோயால் பாதிக்கப்பட்டு பல துன்பங்களை அனுபவித்து 1889ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இறந்தார். புனித தமியான் தொழுநோயாளர்களின் அப்போஸ்தலர் என உலகினரால் அழைக்கப்படுகிறார்.

திருச்சிக்கருகிலுள்ள பாத்திமா நகரில் மரியின் ஊழியர் சபை சகோதரிகள் நடத்தும் தொழுநோயாளர் மையத்தில் 19 ஆண்டுகளுக்கு மேலாகப் பணி செய்பவர் திருவாளர் பிரான்சிஸ் பவுல் ராஜ். அவர் புனித தமியான் பற்றிச் சொல்வதைக் கேட்போம்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.