2009-10-10 16:25:16

ஞாயிறு சிந்தனை


பூஜ்யத்திற்கு, சைபருக்கு மதிப்பு இருக்கிறதா? இருக்கிறது. தனியாக இருக்கும் போது இல்லாத மதிப்பு, இன்னொரு எண்ணோடு ஒட்டிக்கொண்டதும், தொற்றிக் கொண்டதும் வந்து விடுகிறது. பூஜ்யத்தைப் பற்றி ஏன் இந்த திடீர் ஆராய்ச்சி?

ஒரு செல்வந்தர் வீடு கட்டுகிறாராம். கட்டுவார், கட்டுகிறார், கட்டி முடிக்கப் போகிறார் என பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் சென்ற மூன்று ஆண்டுகளாய் மலிந்து வருகின்றன. ஏன் இந்த வீட்டின் மேல் அவ்வளவு ஈர்ப்பு? உலகத்திலேயே அதிக செலவில் கட்டப்படும் வீடு இது என்று சொல்லப்படுகிறது. வீட்டின் மதிப்பு? 4000 கோடி ரூபாய். 4000 கோடிக்கு எத்தனை பூஜ்யங்கள்? இங்குதான் ஆரம்பித்தது என் பூஜ்ய ஆராய்ச்சி.

உலக சந்தையில் ஏறத்தாழ 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த வீட்டில் குடியிருக்கப் போகிறவர்கள் 6 பேர் - அம்மா, மகன், மனைவி அவர்களது மூன்று பிள்ளைகள்... இந்த ஆறு பெருக்கு உதவி செய்ய 600 வேலைக்காரர்கள் அங்கேயே தங்குவார்களாம்.

 தங்கி விட்டுப் போகட்டுமே. உனக்கென்ன? பொறாமையில் நான் புழுங்குவதாக, புலம்புவதாக நினைக்க வேண்டாம். செல்வத்தைப் பற்றி, செல்வந்தர்களைப் பற்றி இயேசு இன்றைய நற்ச்செய்தியில் கூறியது இப்படிப்பட்ட சிந்தனைகளை ஆரம்பித்து வைத்தது.

இன்றைய நற்செய்தியில் ஏராளமாய் சொத்து இருந்த ஒருவர் நிலைவாழ்வு பெற என்ன வழி என்று தேடுகிறார். அந்தத் தேடல் அவரை இயேசுவிடம் கொண்டு வருகிறது. இயேசு அவரிடம் கட்டளைகளைக் கடைபிடிக்கச் சொல்கிறார். அவரோ அதற்கும் மேல் என்ன செய்வது என்று கேட்கும் போது, இயேசு: "நீ சேர்த்த செல்வங்களை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு என் பின்னே வா." என்கிறார். அவர் எதிபார்க்காத சவால் இது. திரும்பிப் போகிறார். அவர் தேடிவரும் நிலை வாழ்வை விட, அவருடைய சொத்துகள் அவரை அதிகமாய் பற்றியிருந்ததால், அவரால் இயேசுவின் சவாலை ஏற்க முடியவில்லை. போகும் போது அவர் இயேசுவை திரும்பி, திரும்பி பார்த்துக்கொண்டே போயிருப்பார். எந்த ஒரு நிமிடமும், இயேசு இன்னொரு எளிதான வழியைச் சொல்லமாட்டாரோ என்ற ஏக்கத்தில் அவர் அப்படி பார்த்தபடியே சென்றிருப்பார். இயேசுவும் அவரைக் கனிவோடு பார்த்தபடியே நின்றிருப்பார். இத்தனை செல்வங்கள் இருந்தும் அவர் கடவுள் மட்டில் இவ்வளவு ஈடுபாடு கொண்டு, கட்டளைகளை எல்லாம் இளவயது முதல் கடைபிடித் திருக்கிறாரே என்று, இயேசுவுக்கு அவர் மேல் மதிப்பு இருந்திருக்கும்... ஆனாலும், என்ன செய்வது? அவரால் அடுத்த நிலைக்கு உயர முடியவில்லையே என்று இயேசுவுக்கு அவர் மேல் பரிதாபம் ஏற்பட்டிருக்கும். அந்த பரிதாப உணர்வில் வெளி வந்தது தான் ஆழமான வார்த்தைகள்: “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.”

இயேசுவின் இந்த கூற்று சீடர்களைத் திகைப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தியதாக நற்செய்தி சொல்கிறது. அதிர்ச்சியையும் சேர்த்துக்கொள்ளலாம். திகைப்பு, வியப்பு, அதிர்ச்சி... இருக்காதா பின்னே? செல்வந்தர் இறைவன் இல்லத்திற்கு கட்டாயம் போவார்கள்; விண்ணக வாசலில் அவர்கள் வரிசையில் நிற்க கூட தேவையில்லை; அவர்களுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என இஸ்ராயேலர்கள் நம்பிவந்த போது, இப்படி ஒரு அதிர்ச்சியான தகவலை இயேசு சொல்கிறார்: "மன்னிக்கவும். அவர்களுக்கு விண்ணரசில் இடம் இல்லை. அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு முயன்றால், ஒருவேளை நிறைவாழ்வுக்கு செல்ல முடியும்." செல்வத்தை பற்றி, செல்வந்தரைப் பற்றி சீடர்களுடைய எண்ணங்களைத் தலைகீழாக புரட்டி, அவர்களைச் சிந்திக்க வைத்தார் இயேசு. இன்று நமக்கும் செல்வம், செல்வந்தர் இவற்றைப் பற்றி சிந்திக்க ஒரு அழைப்பு விடுக்கிறார் இந்த நற்செய்தி மூலம்.



செல்வம் சேர்ப்பது, செல்வங்களால் சிறைப்படுவது, செல்வத்தைப் பகிர்வது என்று மூன்று கோணங்களில் செல்வத்தைப் பற்றி சிந்திக்கலாம். ஒருவர் தன் சொந்த முயற்சியாலோ, அல்லது பரம்பரையாய் வந்த வசதியாலோ செல்வந்தர் ஆகிறார். ஆகட்டுமே... கொஞ்சம் பொறுங்கள். அவ்வளவு எளிதாக, மேலோட்டமாக பேச வேண்டாம். அந்த செல்வம் நேர்மையான வழிகளில் வந்த செல்வம் என்றால், அவர்கள் வாழ்ந்து அனுபவிக்கட்டும். தலைமுறை, தலைமுறைகள்  வாழ்ந்து அனுபவிக்கட்டும் என்று வாழ்த்துவோம்.

ஆனால், சேர்க்கப்பட்ட செல்வம் நேர்மையற்ற குறுக்கு வழிகளில் வந்திருந்தால், கேள்விகள் எழும், சாபங்கள் வெடிக்கும். அதுவும் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி, அவர்கள் வாழ்வை சீரழித்து சேர்க்கப்பட்ட செல்வம் என்றால், கோபம் சாபம் இவை எழுவதில் நியாயம் உள்ளது. பல ஏழைகளுடைய வயிறு பற்றி எரியும் போது, அந்த நெருப்பில் குளிர் காயும் செல்வந்தர்களைப் பற்றி நினைக்கத் தோன்றுகிறது.

நீரோ மன்னன் பிடில் வாசிக்கும் திறமை பெற்றவனாம். அழகான இசை படைப்புகள் அவன் இசைக் கருவியிலிருந்து வெளி வருமாம். அவனுக்கு திறமை இருந்தது. இசையை உருவாக்கினான். இதில் என்ன தவறு என்ற கேள்வி எழும். ஆனால், அவன் அந்த இசையை உருவாக்க, mood தேடினானாம். அந்த music mood உருவாக்க அவன் ரோமை நகரைத் தீயிட்டு கொளுத்தினான் என்பார்கள். கொழுந்து விட்டு எரியும் நகரமும் அங்கு எழும் மக்களின் அவல ஓலங்களும் அவனது இசைப் படைப்பைத் தூண்டியதாகச் சொல்லப் படுகிறது.

திறமை இருந்தது, இசைத்தான் என்று இப்போது சொல்ல முடியுமா? இதே கேள்வியை செல்வந்தரைப் பற்றி பேசும் போதும் எழுப்ப வேண்டும்.

திறமை இருந்தது செல்வம் சேர்த்துக் கொண்டார் என்று மேலோட்டமாகப் பேச முடியாது. பின்னணிகள் அலசப்பட வேண்டும்.



ஒவ்வொரு ஆண்டும் Forbes magazine உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் பட்டியலைத் தரும். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த பட்டியலில் இரு இந்தியர்கள் முதல் பத்து இடங்களில்(7 8 ) இரு இடங்களைப்  பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியல் வெளியிடப்படும் போதெல்லாம் எனக்குள் ஒரு வித்தியாசமான எண்ணம். இந்த கோடீஸ்வரர்கள் அதிகாரப் பூர்வமாய் வெளியிடும் சொத்து விவரங்களை வைத்து இந்த பட்டியல் வந்திருக்கிறது என்றால், இன்னும் கணக்கில் வராத சொத்துக்கள் எவ்வளவு இருக்கும் என்று ஒரு குதர்க்கமான கேள்வி. அதே போல், இந்த கோடீஸ்வரர்களை விட பெரிய செல்வந்தர்கள் நமது அரசியல் தலைவர்கள் ஆயிற்றே. அவர்கள் ஏன் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை? மற்றொரு குதர்க்கமான கேள்வி. என்னைப் போல் கேள்வி பலருக்கும் இருக்கும் என்று எதிர்பார்த்து, இந்தப் பட்டியலை விக்கிபீடியா வெளியிடும் போது அவர்கள் தரும் முன்னுரை இது: This list of billionaires is based (where not otherwise noted) on an annual ranking of the world's wealthiest people compiled and published by Forbes magazine on March 11, 2009. The listed net worth represents the estimated value of assets less debt as of February 13, 2009. The list does not include heads of state whose wealth is tied to their position (see List of heads of state and government by net worth).

இந்தப் பட்டியலில் அரசுத் தலைவர்களைச் சேர்க்கவில்லை, காரணம், அவர்களது செல்வங்களின் அளவு அவர்கள் வகிக்கும் பதவியோடு தொடர்புடையது. அதாவது, இன்று வெள்ளை மாளிகையில் வாழும் பாரக் ஒபாமா அமெரிக்க ஐக்கிய நாடு தன்னுடைய சொத்து என்று உரிமை கொண்டாடுவாரா? அல்லது, அவர் வாழும் வெள்ளை மாளிகையைத்தான் அவரால் உரிமை கொண்டாட முடியுமா? அப்படி ஒவ்வொரு நாட்டுத் தலைவரும் அந்த நாடு தன் சொத்து என்று கொண்டாட ஆரம்பித்தால்?... அப்படி யாரும் செய்வார்களா? இந்தியாவில் வாழும் நாம் இந்தக் கேள்விக்கு எளிதில் பதில் சொல்லி விடுவோம். அப்படி பொது சொத்துக்களை உரிமை கொண்டாடும் பலரை நமக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில், நமது வேட்பாளர்கள் சொத்து குறித்த விவரங்களை வெளியிடும் போது, நம்மில் எத்தனை பேர் உள்ளுக்குள் சிரித்திருக்கிறோம்? ஊரறிய சொல்லப்படும் அந்த பொய்களைப்  பார்த்து சிரிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? செல்வம் சேர்ப்பதைப் பற்றி நினைக்கும் போது என் மனதில் எழும் எண்ணங்கள் இவை.



 செல்வங்களால் சிறைப்படுவது என் இரண்டாவது கருத்து. உலகிலேயே அதிக விலை யுயர்ந்த வீட்டைப் பற்றி முதலில் பேசினேன். செல்வங்களில் சிறை படுவதற்கு இது ஒரு உதாரணம். இந்த வீடு வேறு எந்த முதல் தர நாட்டிலும் கட்டப்படவில்லை. நமது இந்தியாவில் மும்பையில் கட்டப்படுகிறது அல்லது கட்டப்பட்டுள்ளது. 4000 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த வீடு எல்லா வசதிகளும் கொண்டது. இதை வேறு விதமாக சொல்லவேண்டுமானால், அந்த வீட்டில் வாழ்பவர்கள் எந்த காரணத்திற்கும் வெளியே வரத் தேவை இல்லை. இப்படி வாழ்வதும் ஒரு சிறை தானே. இப்படி கட்டப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு பேர் தெரியுமா? அன்டில்லா.  அன்டில்லா என்றால் புராணங்களில் வரும் ஒரு கனவுத் தீவு.  தீவு, சிறை... எல்லாமே நம்மைத் தனிமைப் படுத்தும். இந்த மாளிகையும் அப்படித்தான். செல்வங்களால் சிறை படுவது என்று கூறும் போது பல ஆண்டுகளுக்கு முன்னால், செய்திதாளில் வாசித்த ஒரு கட்டுரை நினைவுக்கு வருகிறது. இதை எழுதியவர் ப்ரென்ச் நாட்டில் பிறந்தவர், இந்தியப் பெண்ணை மணந்து, இந்தியாவில் வாழ்கிறவர். இந்தியா மேல் அதிக ஈடுபாடு. பெயர் பிரான்ஸ்வா குத்தியேர் (francois gautier the ‘Ferengi’s column” in the Indian Express )  பல ஆண்டுகளுக்கு முன்னால், சூரத் என்ற நகரில் கொள்ளை நோய் பரவியதை மையமாகக் கொண்டு அவர் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் செல்வந்தர்களைப் பற்றி கூறியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தியாவில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளை அதிக சுத்தமாக வைத்திருப்பதைப் பார்த்து அசந்து போயிருக்கிறேன். ஆனால், இதே ஆட்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து சேகரித்த குப்பையை வீட்டுக்கு முன் போடுவார்கள். தெரு சுத்தம் பற்றி அவர்களுக்கு கொஞ்சமும் கவலை இருக்காது. மும்பையில் அதிகமாய் செல்வம் கொழிக்கும் ஒரு பகுதியைப் பற்றி குறித்து, அந்த பகுதியிலுள்ள வீடுகள் அரண்மனைகளாய் ஜொலிக்கும் ஆனால், தெருக்கள் குப்பையில் நாறிகிடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். கொள்ளை நோய் பரவிய சூரத் இந்தியாவிலேயே பணக்காரர்கள் நிறைந்த ஒரு நகரம், ஏனெனில் அங்கே உள்ள ஒரு தலையாய தொழில் வைரத் தொழில். அந்த நகரில் கொள்ளை நோயா, எப்படி என்று கேட்பவர்கள் அந்த ஊர் தெருக்களைப் பார்க்க வேண்டும். வீடுகள் அரண்மனைகளாய் இருந்தாலும், பொது சுத்தம் என்று வரும் போது அந்த ஊர் மிகுவும் அழுக்காய் இருந்தது. கொள்ளை நோய் அவர்கள் அனைவரின் சமுதாய சிந்தனையை உலுக்கி எடுத்த ஒரு பாடம். தன் வீடு சுத்தமாய் இருந்தால் மட்டும் போதாது போது இடமும் சுத்தமாய் இல்லை என்றால், அது விரைவில் தன் வீட்டையும் பாதிக்கும் என்பதை அந்த வைர வியாபாரிகள் கொள்ளை நோய் மூலம் கற்றுக் கொண்டனர். ஆனால் இந்தியாவின் பல நகரங்கள் இன்னும் இந்த பாடத்தைக் கற்று கொள்ளவில்லை. ஏதோ தான் வாழும் வீட்டை ஒரு தீவாகவே காணும் செல்வந்தர்கள் போது நலன் பாடங்களையும் விரைவில் கற்றுக் கொள்ளவேண்டும். அவர் எழுதிய எண்ணங்கள் செல்வம் சிறைப்படுத்தும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துகாட்டு.



 இந்தச் சிறையிலிருந்து தப்புவது எப்படி? செல்வத்தைப் பகிர்வது. அதுவும் இயேசு குறிப்பிட்டுச் சொன்னது போல், ஏழைகளிடம் பகிர்வது. பகிர்வைப் பற்றி பல முறை பேசியிருக்கிறோம், கருத்துக்களைக் கேட்டிருக்கிறோம். தோர்டன் வில்டேர் (Thorton Wilder)  என்ற நாடக ஆசிரியர் கூறியுள்ள பொன்மொழிகள்: "பணம் உரத்தைப் போன்றது. குமித்து வைத்தால், நாற்றம் எடுக்கும். பயன் அளிக்காது. பரப்பும் பொது தான் பயனளிக்கும்."

உலக மகா செல்வந்தர்கள் பட்டியலில் முதல் இரு இடங்களில் இருப்பவர்கள்: பில் கேட்ஸ், வாரன் பபெட் (Bill Gates, Warren Buffet). இவர்களது வாழ்க்கையைக் கொஞ்சம் திருப்பி பார்த்தால், நமக்குப் பாடங்கள் கிடைக்கும்.

பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 2008 ஆம் ஆண்டு வரை 28 பில்லியன் டாலர்களைச் சமூகச் சேவையில் செலவழித்திருக்கிறார்கள். பில் கேட்ஸ் கடந்த ஆண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகும் போது, தன் சொத்துக்கள் முழுவதையும் (58 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ளது.) சமூகச் சேவைக்கென எழுதிவைக்கப் போவதாகவும், தன் பிள்ளைகளுக்கு அந்த சொத்து சென்று சேராது எனவும் கூறியதாக செய்திகள் வெளியாயின. வாரன் பபெட் 2006 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் இதுவரை எந்தத் தனி மனிதனும் செய்யாத ஒன்றைச் செய்தார். தன் சொத்திலிருந்து 37 பில்லியன் டாலர்களை பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்குக் கொடுத்தார்.

பில் கேட்ஸ், வாரன் பபெட்  இருவரையும் புனிதராக்கும் முயற்சி அல்ல இது. ஆனால் உலகின் முதன்மையான செல்வந்தர்கள் தங்கள் செல்வங்களை பகிர்ந்து கொண்டது, அதுவும் ஏழைகளோடு பகிர்ந்து கொண்டது, நம்பிக்கை தரும் செய்திதானே!

பூஜ்யத்தில் ஆரம்பித்தோம், மீண்டும் பூஜ்யத்திற்கு வருவோம். 28 பில்லியன் டாலர்கள், 58 பில்லியன் டாலர்கள்,  37 பில்லியன் டாலர்கள், இவைகளுக்கெல்லாம் எத்தனை பூஜ்யங்கள்? சரியாகத் தெரியவில்லை. தெரியவும் தேவையில்லை. ஆனால், இந்தப் பூஜ்யங்களுக்குச் சிறப்பான மதிப்பு உண்டு. எத்தனையோ பூஜ்யங்கள் கொண்ட அவர்களது செல்வங்களை ஏழைகளோடு பகிர்ந்ததால், அந்த பூஜ்யங்கள் பெரு மதிப்பு பெற்று விட்டன.



“நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.”
இயேசுவின் இவ்வார்த்தைகளில் ஒவ்வொருவரும் பொருள் தேடி பயன் பெறுவோம்.







All the contents on this site are copyrighted ©.