2009-10-10 16:05:04

அருட்திரு தமியான் உள்ளிட்ட ஐவர் புனிதர்கள் என அறிவிக்கப்படவுள்ளார்கள்


அக்.10,2009 அருளாளர்கள் சிக்மண்ட் செஷெனி பெலின்ஸ்கி, பிரான்சிஸ்கோ கோல் குய்டார்ட், ஜோசப் தமியான் தெ வூஸ்டர், இரபேல் ஆர்னாய்ஸ் பரோன், மரி தெ லா குருவா ஜான் ஜூகன் ஆகிய ஐவரை புனிதர்கள் என்று இஞ்ஞாயிறன்று அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஆயரான அருளாளர் சிக்மண்ட் செஷெனி பெலின்ஸ்கி, தற்போதைய உக்ரேய்ன் நாட்டில் பிறந்தவர். இவர் மரியாவின் குடும்பத்தின் பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபையை ஆரம்பித்தவர்.

ஸ்பானியரான அருளாளர் அருள்தந்தை பிரான்சிஸ்கோ கோல் குய்டார்ட், புனித கன்னிமரியின் மங்களவார்த்தையின் தொமினிக்கன் சகோதரிகள் சபையைத் தொடங்கியவர்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த அருளாளர் அருள்தந்தை ஜோசப் தமியான் தெ வூஸ்டர், இயேசுமரி திருஇதயங்கள் துறவு சபையைச் சேர்ந்தவர். 1864ம் ஆண்டு ஹவாய்த் தீவுகளின் ஹோனலுலுவுக்கு மறைப்பணியாற்றச் சென்ற இவர் அங்கே குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார். 1873ம் ஆண்டு மொலாக்காய் தீவில் தொழுநோயாளர் மத்தியில் சேவையாற்ற தன்னையே மனமுவந்து கையளித்த முதலாவது நபர் இவர். 16 வருடங்கள் அங்கு சேவை செய்த அவர், இறுதியில் தானும் அந்நோயால் பாதிக்கப்பட்டு பல துன்பங்களை அனுபவித்து 1889ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இறந்தார். புனித தமியான் தொழுநோயாளர்களின் அப்போஸ்தலர் என உலகினரால் அழைக்கப்படுகிறார்.

ஸ்பானியரான அருளாளர் இரபேல் ஆர்னாய்ஸ் பரோன் சிஸ்டெர்சியன் துறவியாவார்.

ப்ரெஞ்ச்க்காரரான அருளாளர் அருட்கோதரி தெ லா குருவா ஜான் ஜூகன், ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபையை ஆரம்பித்தவர். 1792ம் ஆண்டு பிறந்த ஜூகன், உலகினரின் அங்கீகாரத்தை, ஏன் இந்தத் துறவு சபையின் நிறுவனர் என்றுகூட அறியப்பட விரும்பாதவர். இச்சபையினர் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.