2009-10-09 14:41:04

முதல் இந்திய மறைபரப்பு மாநாடு, கிறிஸ்தவராய் இருப்பதன் அர்த்தத்தை அனைத்து இந்திய திருச்சபைக்கு உணர்த்தும், மும்பை பேராயர் நம்பிக்கை


அக்.09,2009 இம்மாதம் 14 முதல் 18 வரை மும்பையில் நடைபெறவிருக்கின்ற முதல் இந்திய மறைபரப்பு மாநாடு, கிறிஸ்தவராய் இருப்பதன் அர்த்தத்தை அனைத்து இந்திய திருச்சபைக்கு உணர்த்தும் என்று தான் நம்புவதாக மும்பை பேராயர் கூறினார்.

திருச்சபையின் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக நடக்கவிருக்கின்ற இம்மாநாடு பற்றிப் பேசிய கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ், ஏறத்தாழ 120 ஆயர்கள், நூற்றுக்கணக்கான குருக்கள், இருபால் துறவியர், பொது நிலையினர் என சுமார் 1500 பேர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.

உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க எனும் தலைப்பில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டின் பிரதிநிதிகள், பிறரன்பு நற்செய்தி வழியாக இந்தியாவை ஒளிரச் செய்வதற்கு இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

சுமார் ஒரு கோடியே 80 இலட்சம் பொதுநிலை கத்தோலிக்கரும் பல்லாயிரக்கணக்கான குருக்களும் இருபால் துறவியரும் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் நற்செய்தி போதனைகளோடும் விழுமியங்களோடும் ஒளிருவதற்கு இம்மாநாட்டு அவர்களை ஊக்கப்படுத்தும் என்றும் கர்தினால் தெரிவித்தார்.

இம்மாநாட்டின் இறுதி நாளாகிய அக்டோபர் 18ம் தேதி, தீபாவளி கொண்டாட்டங்களோடு அது நிறைவடையும் என்று கர்தினால் கிராசியாஸ் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.