2009-10-08 15:47:53

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பாலஸ்தீனியத் தலைவர் முகமத் அப்பாஸ் சந்திப்பு


அக்.08,2009 மத்திய கிழக்குப் பகுதியில், குறிப்பாக இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கிடையே இடம் பெறும் மோதல்கள் முடிவுக்கு வருவதற்கு நீதியான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பாலஸ்தீனியத் தலைவர் முகமத் அப்பாஸிடம் வலியுறுத்தினார்.

பாலஸ்தீனியத் தலைவர் அப்பாஸை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் 15 நிமிடங்கள் தனியாக சந்தித்து உரையாடிய திருத்தந்தை, இந்தத் தீர்வில் அனைவரின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தினார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்குமிடையே இடம் பெறும் பிரச்சனைகளுக்கானத் தீர்வில் இதில் தொடர்புடைய குழுக்கள் மத்தியிலான ஒத்துழைப்பும் ஒருவர் ஒருவர் மீதான மதிப்பும் சர்வதேச சமுதாயத்தின் ஆதரவும் அவசியம் என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாஹூவுக்கும் அப்பாசுக்கும் இடையே கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்ற சந்திப்பு பற்றியும் திருத்தந்தை கேட்டறிந்தார் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.

இச்ந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் தொமினிக் மாம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் அப்பாஸ்.

“எருசலேம் அரபு கலாச்சாரத்தின் தலைநகர்” என்று அராபியத்திலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்ட பழைய எருசலேமை வெளிப்படுத்தும் பலவண்ண வேலைப்பாடுகளைக் கொண்ட படிவம் ஒன்றைத் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார் அப்பாஸ்.

திருத்தந்தையும் வத்திக்கான் பேதுரு வளாகத்தைச் சித்தரிக்கும் வட்ட வடிவ வண்ண வேலைப்பாடு ஒன்றையும் அப்பாஸூக்குப் பரிசாக அளித்தார்.

உரோமையில் இத்தாலிக்கான பாலஸ்தீனிய புதிய தூதரகத்தையும் தொடங்கி வைத்தார் பாலஸ்தீனியத் தலைவர் அப்பாஸ்.








All the contents on this site are copyrighted ©.