2009-10-05 14:30:08

கொடிக்குக் காய் பாரமா?


அக்.05,2009. “ஊட்டி அரசு மருத்துவமனையின் முன்பாக குப்பைத் தொட்டியில் உறங்கும் முதியவர் : காக்க முன்வராத அரசு அதிகாரிகள்”. கொல்கத்தாவில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் தற்கொலை செய்து கொள்ள காவல்துறையிடம் அனுமதி கோரி மனு. இந்தச் செய்திகள் கடந்த மாதத்தில் (ஆகஸ்ட் 26, 27 தினமலர்) வெளியாகியிருந்தன. மழை பெய்து வரும் நிலையில் பாலீதின் போர்த்திய நிலையில் மூட்டை போல குப்பைத் தொட்டியில் உறங்கும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் நிலை மோசமாகி வருகிறது. “இரண்டாம் கடவுள்” என வர்ணிக்கப்படும் “உயிரைக் காக்கும் சுகாதாரத் துறையினர்” உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மேலும், கொல்கத்தா புறநகர்ப்பகுதி பகுய்ஹாத்தியைச் சேர்ந்த வயதான சமர் மவுலிக், பாரதி மவுலிக் தம்பதியர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட கஷ்ட நிலையில், இனிமேலும் எங்களால் வாழ முடியாது. உயிரைப் போக்கிக் கொள்ள அனுமதி வேண்டுமென காவல்துறையிடம் மனு கொடுத்துள்ளனர். கூட்டுக் குடும்பங்களுக்கும் பெற்றோர்களைப் பேணிக் காக்கின்ற பெருமைக்கும் பெயர் போன இந்தியாவிலே இந்நிலை என்பது வேதனையாகவே இருக்கின்றது. இன்று உலகெங்கும் மழைக் காளான்களாய் முளைத்து வரும் முதியோர் இல்லங்களும் கொடிக்குக் காய் பாரமில்லை, ஆனால் காய்களுக்குத்தான் கொடி பாரமாக இருக்கின்றது என்று முணுமுணுக்க வைக்கின்றன.

உலகிலுள்ள 65 வயதுக்கும் மேற்பட்ட 35 கோடியே 50 இலட்சம் பேரில் 20 கோடிப் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர், ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளில் இவ்வெண்ணிக்கை ஒரு கோடியே 27 இலட்சம் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கணக்கிட்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1900மாம் ஆண்டில் 30 இலட்சமாக இருந்த இவ்வெண்ணிக்கை 1994ம் ஆண்டில் 3 கோடியே 30 இலட்சமாக உயர்ந்தது. 1994ல் எட்டுக்கு ஓர் அமெரிக்கர் முதியோர் என்ற விகிதத்தில் இருந்த நிலை, 2030ல் ஐந்துக்கு ஒன்று என மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, முதியோர்கள் எண்ணிக்கை 7 கோடியே 62 லட்சம். இது அடுத்த 25 ஆண்டுகளில் 17 கோடியாக உயரும் என்று சமூக நீதித் துறை கணித்துள்ளது. தற்போதைய மொத்த முதியோரில் பாதிக்கு மேற்பட்டோர் தங்களது குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் தஞ்சம் அடைந்து, பாசத்துக்காக ஏங்கி, சோகமாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் 33 விழுக்காட்டினர் தங்களது வாழ்க்கைத் துணையை பிரிந்து வாழ்கிறார்கள் என்றும் ஓர் ஆய்வு கூறுகிறது.

எனவே உலகில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு இவர்கள் ஆற்றியுள்ள பணிகள் மற்றும் அவர்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை அக்டோபர் முதல் தேதியை முதியோர்க்கென அர்ப்பணிக்கத் தீர்மானித்தது. அதன்படி 1991ம் ஆண்டிலிருந்து அக்டோபர் முதல் தேதியன்று சர்வதேச முதியோர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



முதுமை என்ற மைல் கல்லை உயிர்கள் அனைத்தும் கடந்தே தீர வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் இந்த விழிப்புணர்வு இல்லாமல் வயதானவர்கள் எதற்குமே பயன்படாத குப்பைத் தொட்டியில் போடப்படும் பொருட்களாக ஓரங்கட்டப்படுகிறார்கள், உதாசீனப்படுத்தப்படுகிறார்கள். தாய்த் தமிழில் எத்தனையோ அழகிய சொற்கள் இருக்க, ஏ! பெருசு என்றுகூட வாய்கூசாமல் வாலிபர்களால் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். இறந்த பெற்றோரை நல்லடக்கம் செய்வதற்குக்கூட வரமுடியாமல் ஈமச்சடங்குகளை வீடியோவில் ஒளிப் பதிவு செய்யுமாறு சொல்லி விடுகிறார்கள் வெளிநாடுகளில் வேலை செய்யும் அவர்களின் அன்புப் பிள்ளைகள். புறக்கணிப்பும் உதாசீனமும் மரணத்தைவிட கொடியவை என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்.

தாய் தந்தையர்க்குத் துன்பம் செய்வதைத் தவிர மற்ற எல்லாப் பாவங்களுக்கும் இறைவன் மன்னிப்பளிக்கிறார். பெற்றோருக்குத் துன்பம் செய்தவனுக்கு மரணத்திற்கு முன் தண்டனை வழங்கி விடுகிறான் என்று இசுலாம் புனித நூல் சொல்லுகின்றது. தாய்மையின் மேன்மை பற்றிய அப்துல் ரகுமானின் கவிதை ஒன்றில், “கிழிந்த ஓலைக் குடிசைக்குள் இருக்கும் தாய், கனத்துப் பெய்யும் மழையில் தன் கைக்குழந்தை நனைந்து விடக்கூடாதே என்று தன் முதுகையே கூடாரமாக்குவாள். அப்படியும் அக்குழந்தை நனையும். எப்படியென்றால் தாயின் கண்ணீர்த் துளிகளால் என்று சொல்லியிருக்கிறார். தன் காதலிக்காக தாயின் இதயத்தையே காமுகன் எடுத்துச் சென்ற போது அவன் இடறி விழுவான். அப்போது அந்தத் தாயின் இதயம், அடிபட்டுவிட்டதா? மகனே! என்று அழுததாக கவிஞர் கண்ணதாசன் கூறுவார். தாயும் ஒரு கோவில். காரணம் அவள் கர்ப்பக் கிரகத்திலிருந்து நாம் வெளி வருகிறோம் என்று கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். ஆனால் பல பிள்ளைகள் தங்களது பாசத்தையும் நேசத்தையும் கணனிகளிடம் காட்டுகின்றனர். இந்தத் தாய்மாரும் தந்தையரும் தள்ளாத வயதில் எதிர்பார்ப்பது என்ன?

கோவையில் முதியோர் இல்லங்களுக்கு மருத்துவ உதவி, உடை போன்றவற்றை வழங்கி வரும் ஒரு சமூக சேவகர் சொல்கிறார்:அங்கு மருத்துவ உதவிகளையும் உடைகளையும் கொடுத்து வந்த பொழுது இவற்றைவிட அவர்களுக்கு அதிகம் தேவையான ஒன்று இருக்கின்றது என்று புரிந்து கொண்டேன். அது என்னவென்றால் அவர்களுடன் அமர்ந்து பேசுவது. அவர்கள் சொல்வதைக் கேட்கும் பொழுது அவர்கள் அடையும் மகிழ்ச்சியும் நிறைவும் வேறு எதிலும் இல்லை என்கிறார். முதியோரோடு நேரம் செலவழிப்பதற்கு கோவையில் இருக்கிறவர்கள் வரலாம் என்றும் அழைப்புவிடுத்திருக்கிறார்.

இன்று முதியோர் இல்லங்கள் காலத்தின் கட்டாயம் என்று சிலர் நியாயப்படுத்துகின்றனர். இன்னும் சிலரோ, சமுதாயத்தில் அன்பு பாசம், சகிப்புத்தன்மை, பெரியவர் மீதான மதிப்பு, அரவணைப்புப் போன்ற உயரிய பண்புகள் செத்து விட்டதே முதியோர் இல்லங்கள் பெருகுவதற்குக் காரணம் என்று வருத்தப்படுகின்றனர். சிந்தனையாளர்களோ, “சொந்த வீடுகளே முதியோர் இல்லங்களாக மாறியது மட்டுமல்ல, இருண்ட இதயங்கள் பெருகி இருப்பதற்கான அடையாளங்களாகவும் அவை இருக்கின்றன” என்று ஆதங்கப்படுகின்றனர். அனாதை ஆசிரமங்களும் முதியோர் இல்லங்களும் எதிர்த்திசையில் நீளும் ஒரே பரிமாணத்தின் இரண்டு முனைகள். இரண்டுமே வற்றிய மனித நேயத்தின் முத்திரைகள், அழியாத மச்சங்கள். எந்த சமுதாயத்தில் அனாதை ஆசிரமங்கள் அதிகரிக்கின்றனவோ அங்கே முதியோர் இல்லங்களும் அதிகரிக்கவே செய்யும். மூலத்தையே நிராகரிக்கின்ற பழக்கம் நம்மிடையே விரைவாகப் பரவி வருகின்றது என்கிறார் ஓர் எழுத்தாளர்.

அவ்வை மூதாட்டி சொன்னார் – இளமையில் வறுமை கொடியது என்று. ஆனால் அன்பர்களே, முதுமையில் வறுமை அதனினும் கொடியதாக இருக்கின்றது. காலம் மென்று துப்பிய சக்கையாக உடல் ஆன பின்பு போதிய உணவோ மருந்தோ இனிய சூழலோ வாய்க்கப்படாவிட்டால் வாழ்ந்த திருப்திகூட இல்லாமல் இறுதி மூச்சு அடங்கிப் போகின்றது. வாழும் போது வயிறார உணவு கொடுக்காத குடும்பம் இறந்த பிறகு ஊரார் பாராட்ட வேண்டுமென்பதற்காக மலர் வண்டியில் வைத்து சரப்பட்டாசு வெடித்து இறுதி ஊர்வலத்தை நடத்துகிறது. பளிங்கினால் கல்லறை கட்டி ஆண்டுதோறும் பத்திரிகைகளில் நினைவஞ்சலியும் செலுத்த மறக்காதிருக்கிறது. வாழும் போது உதாசீனப்படுத்திவிட்டு, இறந்த போது விழுந்து விழுந்து கவனிக்கின்றது. இந்த வெளிவேடங்களில் இறந்த பெற்றோரின் ஆன்மாக்கள் சாந்தி அடையுமா?

உடல் பொருள் ஆவி கொடுத்து ஓய்ந்த முதியோர்க்குத் தேவைப்படுவதெல்லாம் அன்பும் பாசமும் அரவணைப்பும்தான். இத்தாலியிலோ, ஆஸ்திரேலியாவிலோ ஆப்ரிக்காவிலோ எங்கு இருந்தாலும் எல்லா வயதானவர்களும் எதிர்பார்ப்பது இவைதான். “சொல்லாலும் செயலாலும் உங்கள் பெற்றோரை மதியுங்கள்: அப்பொழுது உங்களுக்கு ஆண்டவரின் ஆசி கிடைக்கும்” என்று சீராக் புத்தகம் சொல்கிறது. எனவே நம் குடும்பங்களிலும் பிற இடங்களிலும் வாழும் முதியோரிடம் கரிசனையுடன் நடந்து கொள்வோம். அவர்கள் ஆசீர்வாதத்துடன் வாழப் பழகுவோம். கொடி பாரம் என்று கருதாமல் காய்கள் செயல்படட்டும். அவர்களின் அனுபவங்கள் நமக்குப் பாடமாகட்டும். அதேசமயம் முதுமையில் இன்பம் காண, இளமையிலிருந்தே உடல் நலம், மன நலத்தில் கவனம் செலுத்துவோம். குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஒரு நல்ல நிலையில் வாழக் கற்றுக் கொள்வோம். உடலை வாழ வைப்பது உயிர். உலகை வாழ வைப்பது உறவு.








All the contents on this site are copyrighted ©.