2009-10-05 15:44:37

ஆப்ரிக்காவில் அநீதிகள் களையப்படுவதற்கான நடவடிக்கைகளுக்குத் திருச்சபை தொடர்ந்து தன்னை அர்ப்பணிக்கும், திருத்தந்தை


அக்.05, 2009 ஆப்ரிக்கக் கண்டத்தில் திருச்சபை தனது நற்செய்தி மற்றும் பிறரன்பு பணிகளைத் தொடர்ந்து செய்து, அக்கண்டத்தில் அநீதிகள் களையப்படுவதற்கான நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து தன்னை அர்ப்பணிக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இஞ்ஞாயிறு காலைக் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தி ஆப்ரிக்கக் கண்டத்திற்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவையை தொடங்கி வைத்த அவர் இவ்வாறு கூறினார்.

கடவுளின் முழுமையான இறையாண்மை, ஆப்ரிக்கக் கலாச்சாரத்தின் முனைப்பான மற்றும் ஒன்றிணைக்கும் கூறாக இருக்கின்றது என்று உரைத்த திருத்தந்தை, உண்மையில் ஆப்ரிக்காவில் பல்வேறு கலாச்சாரங்கள் இருந்த போதிலும் அவை அனைத்தும், இறைவனே படைத்தவர், அவரே வாழ்வின் ஊற்று என்ற உண்மையை ஏற்பது போல் இருக்கின்றன என்று கூறினார்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து மறையுரையாற்றிய அவர், இறையாண்மை, படைத்தவர், ஆண்டவர், திருமணம், குழந்தைகள் ஆகியவைகளை வலியுறுத்திப் பேசினார்.

ஆப்ரிக்காவின் கடவுள் பற்றிய ஆழமான உணர்வை தனது அண்மை மேய்ப்புப் பணியின் போது உணர முடிந்தது என்றும் இது மனித சமுதாயத்திற்கு அளப்பரிய ஆன்மீக மூச்சாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

திருமண வாழ்வில் கடவுளுடன் இருக்க வேண்டிய உறவு பற்றிப் பேசி, ஆப்ரிக்கா, திருமணத்தின் மீது கட்டப்பட்ட குடும்ப வாழ்க்கைக்கு ஆதரவான வளங்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

துரதிஷ்டவசமாக ஆப்ரிக்காவின் பல நாடுகள், வறுமை, அநீதி, வன்முறை போர்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வேளை திருச்சபை ஆப்ரிக்க சமுதாயத்திற்கு ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிக்கான பணிகளைச் செய்ய அழைக்கப்படுகின்றது என்றார் திருத்தந்தை.

239 பேரவைத் தந்தையரும் இப்பேரவைக்கு உதவும் 55 குருக்களும் திருத்தந்தையோடு சேர்ந்து கூட்டுத் திருப்பலி நிகழ்த்தினர். காங்கோ நாட்டு பாடகர் குழு சிஸ்டீன் சிற்றாலய பாடகர் குழுவுடன் சேர்நது திருப்பலியில் பாடியது.

அக்டோபர் 25ம் தேதி நிறைவு பெறும் ஆப்ரிக்காவுக்கான இந்த இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவை, ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிக்கான பணியில் ஆப்ரிக்காவில் திருச்சபை, நீங்களே உலகின் உப்பு, நீங்களே உலகின் ஒளி என்ற தலைப்பில் நடைபெறுகிறது.








All the contents on this site are copyrighted ©.