2009-10-03 18:19:01

ஞாயிறு சிந்தனை


ஒரு கதையோடு ஞாயிறு சிந்தனைகளை ஆரம்பிக்கிறேன். கிறிஸ்தவத் திருமணங்களுக்கு முன்னால், மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் கிறிஸ்தவ மறைகல்வி எவ்வளவு தெரிந்திருக்கிறதென பங்கு தந்தை சோதிப்பார். அப்படி ஒரு முறை, திருமணத்திற்கு நாள் குறிக்க வந்த ஒரு இளைஞனிடம் பங்கு தந்தை கேட்டார்:

“இயேசு திருமணத்தைப் பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அப்படி சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருக்கிறார்?” வந்திருந்த இளைஞன் தயங்கினான். பின்னர், "சொல்லியிருக்கிறார், சாமி. தந்தையே, இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்."

அன்பர்களே, திருமணத்தை அறிந்து செய்கிறோமா? அறியாமல் செய்கிறோமா? நல்ல கேள்வி. எவற்றையெல்லாம் அறிந்து செய்கிறோம்? எவற்றையெல்லாம் அறியாமல் செய்கிறோம்?

குலம், கோத்திரம், நாள், நட்சத்திரம் இவைகளெல்லாம் பொருந்தி வருகின்றனவா என்று ஏகப்பட்ட ஆராய்ச்சிகள். அடுத்ததாக, படிப்பு, தொழில், சம்பளம், சொத்துக்கள் என்று ஒரு நீண்ட கணக்கு ஆராய்ச்சி. எவ்வளவு தருவது, எவ்வளவு பெறுவது என்று ஒரு வியாபார ஒப்பந்தம்.

இந்த ஆராய்ச்சிகளுக்கு நாம் செலவிடும் நேரம், ஏற்றுக்கொள்ளக்கூடியது தானா?

இத்தனைப் பொருத்தங்களும் பார்த்து நடத்திவைக்கபடும் திருமணங்கள் வெற்றிகரமாக அமைகின்றனவா? அப்படி அமையாவிட்டால், ஒருவர் ஒருவரைச் சுட்டி காட்டும் படலம் ஆரம்பமாகும்.

திருமண வாழ்வுக்கு முன்னேற்பாடாக எதை நாம் அறிய வேண்டும். பழைய திரை படப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

"கட்டடத்துக்கு மனைப் பொருத்தம் அவசியம். காதலுக்கு மனப் பொருத்தம் அவசியம்."

மனப் பொருத்தம் நம்மில் எத்தனைப் பேர் பார்க்கிறோம்? இனம், குலம், மதம், பணம் என்று எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கும் நாம், குணம், மனம் இவற்றின் பொருத்தம் பார்ப்பது ரொம்ப அரிது. மனம், குணம் இவைப் பொருந்த வில்லை என்றால், இவை போகப் போகச் சரியாகி விடும் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். மனம், குணம் இவைகளில் என்னதான் பொருத்தம்  பார்த்தாலும், நாளுக்கு நாள் மாறக்கூடிய இவைகளுக்கு என்ன உத்தரவாதம்? இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு, பல ஆண்டுகள் பழகியபின் மேற்கொள்ளப்படும் காதல் திருமணங்களில் கூட இந்த உத்தரவாதம் இல்லையே.

இப்படி பலவாறான எண்ண ஓட்டங்கள். உத்தரவாதத்தைப் பற்றி பேசும் போது, மற்றொரு எண்ணம் எழுகிறது. பொருட்களை வாங்கும் போது உத்தரவாதம் பார்த்து வாங்குகிறோம். தேர்ந்தெடுத்தப் பொருள் சரியில்லை என்றால், திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு ஒன்று வாங்கி வருகிறோம். திருமண உறவில், வாழ்வில் இப்படி மாற்ற முடியுமா?

இந்தக் கேள்விதான் இன்றைய நற்செய்திக்குப் பின்னணி. சீடர்கள் கேட்கும் கேள்வி இது: "கணவன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" மனைவி எதோ ஒரு பொருள் போலவும், அந்தப் பொருளை ஆண்மகன் திருப்பிக் கொடுப்பது போலவும்.. இந்தக் கேள்வியின் தொனி அப்படி! இஸ்ராயலர்கள் மத்தியில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட சமூக நிலை சரியாக இல்லை. இன்றும் இதேபோல் சூழ்நிலை பல சமுதாயங்களில் உள்ளது.

இவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க இயேசு இப்படி செய்திருக்கலாமோ என்று நான் நினைப்பதுண்டு. "கணவன் மனைவியை விலக்கி விடுவது முறையா என்று கேட்கிறீர்கள். சரி! மனைவி கணவனை விலக்கி விடுவது முறையா என்று நான் கேட்டால், என்ன பத்தி சொல்வீர்கள்?" இப்படி இயேசு கேட்டிருந்தால், அவர்கள் வாயடைத்துப் போயிருப்பார்கள்.

இயேசுவை வித்தியாசமாக நினைத்துப் பார்க்கும் என் முயற்ச்சிகளில் மற்றுமொரு சம்பவத்தை இங்கே கூற வேண்டும். யோவான் நற்செய்தியில் இந்த சம்பவம். (யோவான் 8: 1-11) ஏசுவுக்கு முன்னால் விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை கொண்டு வந்து நிறுத்துகின்றனர், பரிசேயரும், மதத் தலைவர்களும். அவர்கள் சொல்லும் வார்த்தைகள்: "இப்பெண், விபச்சாரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டவள். இவளைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். நீர் என்ன சொல்கிறீர்?" அவர்களுக்கும் இயேசு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்க வேண்டும். "விபச்சாரத்தில் கையும், களவுமாகப் பிடிபட்டவள் என்று சொல்கிறீர்கள், அந்த ஆண் எங்கே?" என்று கேட்டு, அவர்களைச் சங்கடத்தில் வாயடைக்கச் செய்திருக்கலாம். மாறாக, இயேசு குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். வந்திருந்தவர் பாவங்களைத் தான் அவர் எழுதிக் கொண்டிருந்தார் என்று ஒரு சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவரது மௌனத்தைக் கலைக்க அவர்கள் மீண்டும் மீண்டும் முயன்றதால், "உங்களில் பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும்." என்றார். சரியான நெத்தியடி அது!

இன்றைய நற்செய்தியிலும் சீடர்களுடைய கேள்வியில் இருந்த தவறான மதிப்பீடுகள், முரண்பாடுகள் இவற்றை நேரடியாகச் சொல்லாமல், "ஆணுக்குப் பெண் சரி நிகர் சமம்" என்று ஆணித்தரமாய் சொல்கிறார், இயேசு.

அன்பர்களே, இந்த உண்மையை மட்டும் இந்த உலகம் உணர்ந்தால்...

இந்த உண்மையின் ஆழத்தை மட்டும் இந்த உலகம் மீண்டும் மீண்டும் அசை போட்டால்...

இந்த உண்மையின் ஆழத்தை நாம் ஒவ்வருவரும் புரிந்து கொள்ள முடிந்தால்...

அப்படி புரிந்து கொள்வதன் மூலம், இவ்வுண்மையை மனதார ஏற்றுக் கொள்ள முயன்றால்...

ஆண்-பெண் உறவுகள் எவ்வளவோ நலமுடன், சக்தியுடன் வளரும். திருமண வாழ்வின் பிரச்சனைகள் தீரும்.

ஆணா, பெண்ணா, நீயா, நானா,,, யார் பெரியவர் என்ற கேள்வியை எழுப்பாமல், இருவரும் இணை என்று உணரும் போது, வாழ்க்கைப் பிரச்சனைகள், சிறப்பாக, திருமண வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வழியுண்டு.

யார் பெரியவர் என்று போன வார நற்செய்தியில் கேள்வி எழுப்பிய சீடர்கள் மத்தியில் இயேசு ஒரு குழந்தையை வைத்தார். இந்த வார நற்செய்தியிலும், இயேசு "குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள். இறையாட்சி அவர்களதே" என்கிறார்.

இந்த மூன்று வாரங்களாய் குழந்தைகளிடமிருந்து பாடங்கள் கற்று கொள்ள இயேசு தொடர்ந்து கூறி வருகிறார்.

வாழ்க்கையின் பிரச்சனைகளைச் சமாளிக்க, வளர்ந்துவிட்ட நமக்கு தெயர்யவில்லை என்றால், குழந்தைகளிடம் பாடங்கள் கற்றுக்கொள்ளலாமே!







All the contents on this site are copyrighted ©.