2009-10-03 15:03:50

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தைக் கட்டி எழுப்புவது தலையாயக் கடமை, திருப்பீட உயர் அதிகாரி


அக்.03,2009 ஐக்கிய நாடுகள் நிறுவனம், நாடுகள் நல்லதோர் நிலையை அடைவதற்கு அவற்றின் செயல்களை ஒருங்கமைவு செய்வதற்கு மையமாக இருப்பதால் அந்நிறுவனத்தைக் கட்டி எழுப்புவது தலையாயக் கடமை என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையின் 64வது அமர்வில் உரையாற்றிய அந்நிறுவனத்திற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தினோ மிலியோரே இவ்வாறு தெரிவித்தார்.

வளர்ச்சியின் இயல்பு, உதவி பெறும் மற்றும் உதவி வழங்கும் நாடுகளின் பங்கு ஆகியவை பற்றி நோக்கும் பொழுது உண்மையான வளர்ச்சி என்பது மனித வாழ்வை முழுமையாய் மதிப்பதை உள்ளடக்கியிருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஹொண்டுராஸ் நாட்டில் நீண்ட காலமாகக் காணப்படும் அரசியல் குழப்பத்தால் குடிமக்கள் துன்பங்களையும் சோர்வையும் கடின வாழ்வையும் அனுபவிக்கின்றனர் என்று சுட்டிக் காட்டி அம்மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அதற்குப் பொறுப்பான குழுக்கள் முயற்சி எடுக்க வேண்டுமென்று திருப்பீடம் விரும்புகின்றது என்றும் பேராயர் கூறினார்.

வருகிற டிசம்பர் 8 முதல் 16 வரை கோப்பன்ஹாகனில் நடைபெறவிருக்கின்ற அனைத்துலக வெப்பநிலை மாற்றம் பற்றிய மாநாட்டை பற்றியும் குறிப்பிட்ட பேராயர் மிலியோரே சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் நாடுகளின் நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.