2009-10-03 15:02:51

ஆப்ரிக்கக் கண்டத்திற்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவை ஞாயிறு தொடங்குகிறது


அக்.03,2009 ஆப்ரிக்கக் கண்டத்திற்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவையை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இஞ்ஞாயிறு காலைக் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தி தொடங்கி வைக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஆப்ரிக்காவின் 53 நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள், குருக்கள், பொது நிலையினர், இன்னும், வேறு நாடுகளிலிருந்து திருத்தந்தை அழைப்புவிடுத்த 47 ஆயர்கள் என ஏறத்தாழ நானூறு பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

ஒவ்வோர் ஆப்ரிக்க நாட்டிலிருந்து குறைந்தது ஓர் ஆயர், 14 ஆப்ரிக்க கர்தினால்கள், வத்திக்கான் அலுவலகங்களின் 25 தலைவர்கள், ஐரோப்பாவிலிருந்து 34 பிரதிநிதிகள், வடக்கு மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து 10 பிரதிநிதிகள், ஆசியாவிலிருந்து இரண்டு பிரதிநிதிகள், ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு பிரதிநிதி என இந்தச் சிறப்பு ஆயர் பேரவையில் பங்கு கொள்கின்றனர்.

இந்தப் பேரவைத் தந்தையர்களுள் 197 பேர் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள். 244 பேர் வாக்களிக்கும் உரிமை உடையவர்கள். 29 பேர் வல்லுனர்கள். 49 பேர் பார்வையாளர்கள்.

ஆப்ரிக்காவிலுள்ள பிற கிறிஸ்தவச் சபைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவன இயக்குனர் ஜாக் தியோப், ஐ.நா-ஆப்ரிக்க ஐக்கிய அவை இணைந்த டார்பூர்க்கான அமைதி காப்புப் பணியின் முன்னாள் தலைவர் ருடோல்ப் அடடா போன்றோரும் இதில் பங்கு பெற அழைப்புப் பெற்றுள்ளனர்.

இதில் கலந்து கொள்ளும் 29 வல்லுனர்களுள் 19 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள். மேலும், 49 பார்வையாளர்களுள் 29 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள் ஆவர்.

அக்டோபர் 25ம் தேதி நிறைவு பெறும் ஆப்ரிக்காவுக்கான இந்த இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவை, ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிக்கான பணியில் ஆப்ரிக்காவில் திருச்சபை என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.

ஆப்ரிக்கக் கண்டத்திற்கான முதலாவது சிறப்பு ஆயர் பேரவை 1994ம் ஆண்டில் நடை பெற்றது.








All the contents on this site are copyrighted ©.