2009-09-28 16:49:56

திருத்தந்தையின் திருப் பயணம். செக் நாட்டில் பாப்பிறை - இறுதி நாள்.


இத்திங்களன்று செக் நாட்டில் திருத்தந்தையின் இறுதி நாள் பயணத் திட்டங்கள் இடம் பெற்றன. மூன்று நாட்களின் கோலாகலம் ஒரு முடிவுக்கு வந்தது. இத்திங்கள் செக் நாட்டிற்கு ஒரு முக்கியமான நாள். ஏனெனில், அந்நாட்டிற்கு அது ஒரு தேசிய திருவிழா. அந்நாட்டு பாதுகாவலரும், முக்கியப் புனிதருமான வென்செஸ்லாஸின் திருநாள்.

1989 ஆம் அண்டு நவம்பர் மாதம் கம்யுனிசப் பிடியிலிருந்து வெளி வருவதற்கான மக்களின் புரட்சி வெடித்ததன் 20 ஆம் ஆண்டு நிறைவைச் சிறப்பாகக் கொண்டாட செக் குடியரசு தன்னைத்தான் தயாரித்து வரும் வேளையில், இடம் பெறும் திருத்தந்தையின் திருப்பயணம் அவர்களின் முக்கியப் புனிதர் வென்செஸ்லாஸின் திருநாளையும் உள்ளடக்கியது சிறப்பு நிறைந்ததே.

இஞ்ஞாயிறன்று மாலை உள்ளூர் நேரம் 5.15 மணிக்கு, இந்திய நேரம் இரவு 8.45 மணிக்கு கிறிஸ்தவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார், பாப்பிறை. ப்ராக் பேராயர் இல்லத்தின் இரண்டாம் மாடியில் இடம் பெற்ற இச்சந்திப்பில் செக் கிறிஸ்தவ சபைத் தலைவர்களுடன், யூத மதப் பிரதிநிதிகளும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பை முடித்தபின், அக்கோட்டையில் 300 மீட்டர் தூரத்திலிருந்த வ்லடிஸ்லவ்ஸ்கி அரங்கிற்கு திறந்த காரில் சென்றார் திருத்தந்தை. வழியில் இருமருங்கிலும் கூடியிருந்த மக்களை ஆசிர்வதித்துக்கொண்டேச் சென்ற திருத்தந்தை உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு, அவ்வரங்கில் குழுமியிருந்த கல்வியாளர்கள், மாணவப்பிரதிநிதிகள், அரசு, கலைத் துறை நிறுவனகளின் பிரதிநிதிகள் மற்றும் கத்தோலிக்க கலை அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். கல்வியாளர் களுடன் ஆன இச்சந்திப்பின் இறுதியில் திருத்தந்தைக்கு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது. அங்கிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் "உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்" என்ற யோவான் நற்ச்செய்தி  8 ஆம் அதிகாரம் 3 ஆம் வசனத்தை லத்தின் மொழியில் எழுதி கையெழுத்திட்டார் பாப்பிறை. கல்வியாளர் களுடன் ஆன இச்சந்திப்புடன் திருத்தந்தையின் இரண்டாம் நாள், அதாவது, ஞாயிறு தின திருப்பயணம் நிறைவுக்கு வந்தது.



திருத்தந்தையின் இத்திங்கள் தினப் பயணம், ஸ்தாரா பொலெஸ்லாவில் உள்ள புனித வென்செஸ்லாஸ் கோவிலுக்குச் சென்று, அப்புனிதரின் புனிதப் பொருட்கள் முன் செபிப்பதுடன் துவங்கியது. இப்புனிதர் கொல்லப்பட்ட இடத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்கு வந்த திருத்தந்தையை, கோவில் வாசலில் பங்கு தந்தை, அப்பகுதி மாகாணத் தலைவர், மேயர் ஆகியோர் கூடி நின்று வரவேற்றனர். சிறுவர், சிறுமியர் அடங்கிய குழு ஒன்று திருத்தந்தையை வரவேற்று பாடல் ஒன்று பாடியது. அதேவேளை, கோவிலின் உள்ளே, அந்நாட்டின் குருக்களுக்கான முதியோர் இல்லத்தில் வாழும் ஏறத்தாழ 20 குருக்கள் அவர்களின் உதவியாளர்களுடன் காத்திருந்தனர். கோவிலில் நுழைந்த திருத்தந்தை, புனிதரின் புனிதப் பொருட்கள் இருந்த சிறு உள் கோவிலில் முழந்தாள் படியிட்டு சிறிது நேரம் செபித்தார்.

நிரந்தரமாக, ப்ராகின் கோட்டையிலுள்ள புனித வென்செஸ்லாஸ் பேராலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் இப்புனிதப்பொருள், திருநாளன்று ஸ்தாரா பொலெஸ்லாவில் உள்ள புனித வென்செஸ்லாஸ் கோவிலுக்கு ராஜ மரியாதையுடன் அரசுத் தலைவருக்குரிய வாகனத்தில், பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்புடன் கொண்டுவரப்படுவது வழக்கம். புனிதரின் புனிதப் பொருட்களைத் தரிசித்த பின், கோவிலில் இருந்த முதிய குருக்களைச் சந்தித்து, வாழ்த்துக்களை தெரிவித்தார், திருத்தந்தை.



அங்கிருந்து 1.3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திறந்தவெளி அரங்கில் திருப்பலி நிறைவேற்ற, திறந்த காரில் சென்றார் பாப்பிறை. ஏறத்தாழ 50000 விசுவாசிகள் அங்கு குழுமியிருந்தனர். திருப்பலியின் இறுதியில் இளைஞர்களுக்கென சிறப்புச் செய்தி ஒன்றையும் அளித்தார் பாப்பிறை. திருப்பலியின் இறுதியில் இளைஞர்கள் அவரிடம் செக் குடியரசில் தாங்கள் கூடியிருந்ததைச் சித்தரிக்கும் புகைப்பட புத்தகம் ஒன்றை கொடுத்தனர். அதனுடன், ஆப்பிரிக்க திருச்சபைக்கென இளைஞர்கள் திரட்டிய தொகை காசோலையாக அளிக்கப்பட்டது. இத்திருப்பலியுடன் திருத்தந்தையின் செக் நாட்டுத் திருப் பயணம் நிறைவு பெற்றது.







All the contents on this site are copyrighted ©.