2009-09-26 17:39:26

திருத்தந்தையின் 13 வது வெளிநாட்டுத் திருப் பயணம். செக் நாட்டில் பாப்பிறை.


செப். 26, 2009. செக் நாடு 20 ஆண்டுகளுக்கு முன்னர் கம்யூனிசப் பிடியிலிருந்து விலகி சுதந்திரக் காற்றைச் சுவாசித்த நாடு. உலகின் ஏனைய நாடுகளுக்கு ஒரு முன் உதாரணம் போல், எந்தவித போரோ, சண்டையோ இன்றி அமைதியாகக் கை குலுக்கிக் கொண்டே பிரிந்து வந்த நாடு. அதாவது, செகஸ்லோவாக்கியா என இருந்தது, செக், ஸ்லோவாக் என இரு நாடுகளாகப் பிரிந்து வந்தது. அத்தகைய அமைதி நாட்டிற்கு இச்ச்னியன்று காலை உள்ளூர் நேரம் காலை 9.44 மணிக்கு ரோம் நகரின் சியம்பினோ விமான தளத்திலிருந்து தன் திருப் பயணத்தைத் துவக்கினார் பாப்பிறை 16 ஆம் பெனெடிக்ட். அப்போது இந்திய நேரம் நற்பகல் 1 மணி 14 நிமிடம்.

இந்திய நகர்களோடு ஒப்பிடுகையில், செக் தலைநகர் ப்ராக் மிகவும் சிறியது. மோல்டோவா ஆற்றின் கரையில் உள்ள இந்த நகரம், ஐரோப்பாவில் உள்ள மிக அழகிய நகர்களுள் ஒன்று என்றுரைப்பார்.

ப்ராக் பெரு மறைமாவட்டத்தின் 20 லட்சத்து 45 ஆயிரத்து 957 மக்கள் தொகையில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 111 பேர் கத்தோலிக்கர். இங்குள்ள 247 பங்குத் தளங்கள், 24 கல்வி நிலையங்கள், 34 உதவி அமைப்புகளில், 182 மறைமாவட்ட குருக்கள், 157 துறவற குருக்கள், 376 அருட்கன்னியர்கள் பணி புரிகின்றனர். செக் தலைநகர் ப்ராகின் பேராயராக, கர்தினால் மிலோஸ்லாவ் உள்ளார். இவர் செக் குடியரசின் பிதாப்பிதா என்றும் அழைக்கப்படுகிறார்.

நம் திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் செக் தலைநகர் ப்ராக் ஐ வந்தடைந்த போது, ஸ்டாரா ரூசீன் விமான தளத்தில் அவரை வரவேற்க அரசுத் தலைவர் வச்லவ் க்லாஉஸ், கர்தினால் மிலோஸ்லாவ் செக் ஆயர் பேரவைத் தலைவர் ஜான் க்ரவுப்னேன் மற்றும் திருச்சபை அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் குழுமியிருந்தனர்.

செக் நாட்டிற்கான திருப்பீட தூதர் பேராயர் தியேகோ காவ்செரோ விமானத்திற்குள் சென்று திருத்தந்தையை வரவேற்று வர, திருத்தந்தையை முதலில் அரசுத்தலைவரும், அவர் மனைவியும் படிக்கட்டின் அருகே நின்று கை குலுக்கி வரவேற்றனர். பின்னர், கர்தினால் மிலோஸ்லாவ்ம் வாழ்த்தியபின், ஒரு சிறுவனும், இரு சிறுமிகளும் திருத்தந்தைக்கு மலர் கொத்துக்களை வழங்கி வரவேற்றனர். பின்னர், திருத்தந்தைக்கு ராணுவ மரியாதை வழங்கப்பட்டது. செக் குடியரசின் தலைவர் திருத்தந்தையை செக் நாட்டு மக்கள் சார்பில் வரவேற்றுப் பேசினார். அதன்பின், திருத்தந்தையும் அந்நாட்டிற்கான தன் முதல் உரையை அளித்தார்.



பின்னர் அங்கிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தலைநகரின் வெற்றியின் மரியன்னை கோவிலுக்கு வந்தார் திருத்தந்தை. அங்குள்ள குழந்தை இயேசு திரு உருவச் சிலை முன்னர் மண்டியிட்டு அமைதியாகச் செபித்தார் பாப்பிறை. இக்கோவில் இப்போது கார்மல் துறவுச் சபையால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. திருத்தந்தை அங்கு கூடியிருந்தவர்களுக்கு தன் உரையை வழங்கினார்.


அதன்பின், அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருப்பீடத் தூதரகம் சென்ற திருத்தந்தை, அங்கு மதிய உணவருந்தி, சிறிது நேரம் ஓய்வும் எடுத்துக்கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.