2009-09-25 16:04:46

கிறிஸ்தவ தொழுநோய் மருத்துவமனையின் பணிகள் முடிவடையும் ஆபத்து 


பெங்களூரின் வடப் பகுதியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சபையின் கண்காணிப்பில் நடத்திவரப்படும் சும்மனஹள்ளி தொழுநோய் மருத்துவமனையின் பணிகள் முடிவடையும் ஆபத்து உள்ளதென  சும்மனஹள்ளி சமூகப்பணிக்குழுவின் இயக்குனர் அருட்தந்தை ஜார்ஜ் கன்னத்தானம் செய்தியாளர்களிடம் கூறினார்.

1977 ஆம் ஆண்டு அரசாங்கம் குத்தகைக்குக் கொடுத்த நிலத்தில் கட்டப்பட்ட மருத்துவமனையில் இந்தப் பணி ஆரம்பமானது. தொழுநோயாளர்கள் மட்டுமன்றி, அண்மையில் AIDS நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த மருத்துவமனைப் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசு வழக்கப்படி எந்தக் குத்தகை நிலமும் முப்பது ஆண்டுகளுக்கு மட்டுமே கொடுக்கப்படும் என்றும், அதற்குப்பின் அந்நிலம் மீண்டும் அரசால் எடுத்துக்கொள்ளப்படும் என்பதும் பழக்கத்தில் உள்ள நடைமுறை. எனவே, இந்த மருத்துவ மனைக்கு வழங்கப்பட்ட குத்தகைக் காலம் இரு ஆண்டுகளுக்கு முன்னால் முடிவடைந்ததை அடுத்து அரசு இந்த நிலத்தை மீண்டும் கோருகிறது என்று அருட்தந்தை கன்னத்தானம் கூறினார்.

இந்த மருத்துவ மனை மூலம் ஏழைகளும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களும் அதிகப் பயனடைவதாக உணர்ந்த அரசு கடந்த ஆண்டுகளில் ஏழு முறை இம்மருத்துவமனைக்கு சிறந்த சேவைக்கான விருதுகளை வழங்கியுள்ளது என்றும், இம்மருத்துவமனை உள்ள நிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள குத்தகைக் காலம் இன்னும் 50 ஆண்டுகள் நீடிக்கப்பட வேண்டும் என சும்மனஹள்ளி சமூகப்பணிக்குழுவின் தலைவரும், பெங்களூரின் பேராயருமான பெர்னார்ட் மொராஸ் கர்நாடக முதலமைச்சருக்கு விண்ணப்பக் கடிதம் அனுப்பியுள்ளார் எனவும் அருட்தந்தை கன்னத்தானம் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.